சென்னை
சென்டிரல் வந்த வந்தே பாரத் ரெயில் மீது கல்வீச்சு - கண்ணாடிகள் உடைப்பு
|பேசின்பிரிட்ஜ் பணிமனையில் இருந்து சென்டிரல் ரெயில் நிலையம் வந்த வந்தே பாரத் ரெயில் மீது கற்களை வீசி கண்ணாடிகளை உடைத்து சென்ற மர்ம நபர்களை ரெயில்வே பாதுகாப்பு படையினர் தேடி வருகின்றனர்.
சென்னையில் இருந்து கோவைக்கும், கர்நாடகா மாநிலம் மைசூருக்கும் வந்தே பாரத் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த 2 ரெயில்களிலும் பயணிகள் அதிக அளவில் பயணம் செய்து வருகின்றனர். இதில், சென்னை-மைசூர் இடையிலான வந்தே பாரத் ரெயில் காலை 5.50 மணிக்கு சென்டிரலில் இருந்து புறப்படும். அந்த வகையில், நேற்று அதிகாலை 4.30 மணியளவில் வந்தே பாரத் ரெயில் பேசின்பிரிட்ஜ் பணிமனையில் இருந்து சென்டிரலுக்கு கொண்டு வரப்பட்டது.
சென்டிரலை நோக்கி வரும்போது, மர்ம நபர்கள் வந்தே பாரத் ரெயிலின் சி-5 மற்றும் சி-7 ஆகிய பெட்டிகளின் கண்ணாடிகள் மீது கல்வீசி தாக்கியுள்ளனர். இதில், ரெயில் பெட்டியின் 2 கண்ணாடிகள் உடைந்தது. வந்தே பாரத் ரெயில் சென்டிரல் ரெயில் நிலைய நடைமேடைக்கு கொண்டு வந்து நிறுத்தப்பட்டது. பின்னர், பயணிகள் ரெயிலில் ஏறியபோது பெட்டியின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டு, உள்ளே கற்கள் சிதறி கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக, சென்டிரல் ரெயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரெயில்வே பாதுகாப்பு படையினர் பெட்டியை ஆய்வு செய்தனர்.
மேலும், ரெயில் பெட்டியில் பதிவாகி இருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ரெயில்வே பாதுகாப்பு படையினர் ஆய்வு செய்தனர். இதையடுத்து, சென்டிரலில் இருந்து பேசின் பிரிட்ஜ் பணிமனை வரையிலான பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் திரட்டியுள்ளனர். இதனைத்தொடர்ந்து, வந்தே பாரத் ரெயிலின் கண்ணாடிகள் மாற்றப்பட்டு, மீண்டும் பயணிகளின் சேவைக்கு இயக்கப்பட்டது. ரெயில் மீது கல் எறிந்த நபர்கள் குறித்து ரெயில்வே பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி தேடி வருகின்றனர்.
வந்தே பாரத் ரெயில்கள் மீது அடிக்கடி நிகழும் கல்வீச்சு சம்பவங்கள் பயணிகள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. ரெயில்கள் மீது கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.