கன்னியாகுமரி
திருவட்டார் அருகே அரசு பஸ் மீது கல்வீச்சு போலீஸ் விசாரணை
|திருவட்டார் அருகே அரசு பஸ் மீது கல்வீசி தாக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்,
திருவட்டார்:
திருவட்டார் அருகே அரசு பஸ் மீது கல்வீசி தாக்கப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்,
கடையாலுமூட்டில் இருந்து தக்கலைக்கு நேற்று மாலை தடம் எண் 13 எச் என்ற அரசு பஸ் சென்று கொண்டிருந்தது. பஸ்சை குலசேகரம் அருகே உள்ள செருப்பாலூரை சேர்ந்த அந்திரேயா என்பவர் ஓட்டினார். அந்த பஸ் செவரக்கோடு நிறுத்தத்தில் நின்றபோது, பதிவெண் பொருத்தப்படாத மோட்டார் சைக்கிளில் வந்த 2பேர் திடீரென பஸ் டிரைவர் அந்திரேயாவிடம் தகராறு செய்தனர். ஆனால், அவர்களுக்கு பதில் கூறாமல் டிரைவர் பஸ்சை இயக்கினார். இதனால், ஆத்திரமடைந்த அந்த நபர்கள் பஸ்சை பின்தொடர்ந்து விரட்டி வந்தனர். வீயன்னூர் சந்திப்பில் வந்தபோது, அந்த நபர்கள் பஸ் மீது கற்களை வீசி விட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச் சென்றனர். இதில், பஸ்சின் முன்பக்க கண்ணாடி உடைந்து நொறுங்கியது. உடைந்த கண்ணாடியின் மதிப்பு ரூ.10 ஆயிரம் என்று கூறப்படுகிறது. இந்த சம்பவத்தில் பஸ்சில் பயணம் செய்த பயணிகள் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து டிரைவர் அந்திரேயா கொடுத்த புகாரின் பேரில் திருவட்டார் போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ஜெயகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.