பெரம்பலூர்
பா.ஜனதா பிரமுகர் வீடு-கார் மீது கல்வீசி தாக்குதல்
|திருமாந்துறையில் பா.ஜனதா பிரமுகர் வீடு-கார் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
பா.ஜனதா பிரமுகர்
பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா, திருமாந்துறை ரோவா நகரை சேர்ந்தவர் தடா பெரியசாமி (வயது 61). இவர் பா.ஜனதாவில் பட்டியல் அணி மாநில தலைவராக உள்ளார். நேற்று முன்தினம் இரவு இவர் தனது குடும்பத்துடன் வீட்டில் இருந்தார்.
அப்போது அவரது வீட்டிற்கு காரில் வந்த மர்ம கும்பல் வளாகத்திற்குள் புகுந்து அங்கு நின்ற காரை கற்களை கொண்டு வீசியும், கட்டை மற்றும் பயங்கர ஆயுதங்களை கொண்டு அடித்தும் சேதப்படுத்தியது. மேலும் வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளை கற்களை கொண்டு வீசி நொறுக்கியது. இதில் இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.
பேரனுக்கு காயம்
இந்த தாக்குதலில் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த தடா பெரியசாமியின் மகன் வழி பேரன் அதிரந்தனுக்கு (4) காயம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றது. இதைத்தொடர்ந்து தடா பெரியசாமியின் பேரன் அருகே உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினான். இந்த சம்பவம் பற்றி அறிந்த பா.ஜனதாவினர் தடா பெரியசாமியின் வீட்டின் முன்பு திரண்டனர்.
இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மதியழகன், மங்களமேடு சரக போலீஸ் துணை சூப்பிரண்டு ஜனனி பிரியா மற்றும் மங்களமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
போலீசார் குவிப்பு
அப்போது போலீசாரிடம் பா.ஜனதாவினர் இந்த தாக்குதலில் ஈடுபட்ட கும்பல் விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் பாதுகாப்பு பணிக்காக போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக தடா பெரியசாமி மங்களமேடு போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
அதில், சமீபத்தில் திருவாரூரில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனை கண்டித்து பேசியதால், அக்கட்சியை சேர்ந்தவர்கள் தான் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு சென்றுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி தாக்குதலில் ஈடுபட்ட மர்ம கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.
தடா பெரியசாமி கடந்த 1990-ம் ஆண்டு திருமாவளவனுடன் இணைந்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை தொடங்கினார். பின்னர் கருத்து வேறுபாட்டால் அக்கட்சியில் இருந்து நீங்கி 2004-ம் ஆண்டு பா.ஜனதாவில் தடா பெரியசாமி சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர்ப்பாட்டம்
பா.ஜனதா பிரமுகர் வீடு மீது தாக்குதல் நடந்ததை கண்டித்து நேற்று மாலை பெரம்பலூர் புதிய பஸ் நிலையத்தில் மாவட்ட பா.ஜனதாவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு கட்சியின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக கட்சியின் அரியலூர் மாவட்ட தலைவர் அய்யப்பன் கலந்து கொண்டு கண்டனம் தெரிவித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கட்சியினர் பா.ஜனதா பட்டியல் அணி மாநில தலைவர் தடா பெரியசாமியின் கார் மற்றும் வீடு மீது தாக்குதல் நடத்திய விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்களை உடனடியாக கைது செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.
மேலும், இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை போலீசார் கைது செய்யவில்லையென்றால் மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தனர்.