< Back
மாநில செய்திகள்
தலையில் கல்லைப்போட்டு மனைவியை கொன்ற விவசாயி
தென்காசி
மாநில செய்திகள்

தலையில் கல்லைப்போட்டு மனைவியை கொன்ற விவசாயி

தினத்தந்தி
|
3 Oct 2023 1:49 AM IST

சுரண்டை அருகே குடும்ப தகராறில் தலையில் கல்லைப்போட்டு மனைவியை கொன்ற விவசாயியை போலீசார் கைது செய்தனர்.

சுரண்டை:

விவசாயி

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே வீரகேரளம்புதூரை அடுத்த ஏந்தலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 55), விவசாயி.

இவருடைய முதல் மனைவி இறந்ததால், கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு துரைச்சி (45) என்பவரை 2-வதாக திருமணம் செய்தார். இவர்களுக்கு குழந்தை இல்லை.

குடும்ப தகராறு

முத்துப்பாண்டிக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டது.

நேற்று முன்தினம் இரவில் வழக்கம்போல் முத்துப்பாண்டி மது குடித்து விட்டு, வீட்டுக்கு சென்று மனைவி துரைச்சியிடம் தகராறு செய்தார்.

தலையில் கல்லைப்போட்டு கொலை

அப்போது ஆத்திரமடைந்த முத்துப்பாண்டி பெரிய பாறாங்கல்லை எடுத்து வந்து, மனைவி என்றும் பாராமல் துரைச்சியின் தலை மீது போட்டார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

பின்னர் முத்துப்பாண்டி தப்பி சென்றார். நேற்று காலையில் நீண்ட நேரமாகியும் துரைச்சி வீட்டில் இருந்து வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் சென்று பார்த்தனர். அப்போது துரைச்சி ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து வீரகேரளம்புதூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே இன்ஸ்பெக்டர் கவுதம் (பொறுப்பு), சப்-இன்ஸ்பெக்டர் கவுசல்யா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

இறந்த துரைச்சியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான முத்துப்பாண்டியை வலைவீசி தேடினர்.

கணவர் கைது

இந்த நிலையில் முத்துப்பாண்டி நேற்று வள்ளியூர் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார். இதையடுத்து அவரை வீரகேரளம்புதூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். தொடர்ந்து முத்துப்பாண்டியை கைது செய்த போலீசார் பின்னர் அவரை ஆலங்குளம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.

கைதான முத்துப்பாண்டிக்கு சொந்த ஊர், நெல்லை மாவட்டம் தேவர்குளம் அருகே கூவாச்சிபட்டி ஆகும். இவரது முதல் மனைவி இறந்ததால், ஏந்தலூரைச் சேர்ந்த துரைச்சியை 2-வதாக திருமணம் செய்து மனைவியின் ஊரிலேயே வசித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுரண்டை அருகே குடும்ப தகராறில் மனைவியின் தலையில் கல்லைப்போட்டு விவசாயி கொலை செய்த பயங்கர சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்