< Back
மாநில செய்திகள்
வேப்பனப்பள்ளி அருகே 13-ம் நூற்றாண்டு நடுகற்கள் கண்டுபிடிப்பு
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

வேப்பனப்பள்ளி அருகே 13-ம் நூற்றாண்டு நடுகற்கள் கண்டுபிடிப்பு

தினத்தந்தி
|
18 April 2023 12:30 AM IST

வேப்பனப்பள்ளி:

வேப்பனப்பள்ளி அருகே 13-ம் நூற்றாண்டு நடுகற்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

நடுக்கற்கள்

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி ஒன்றியம் மணவாரனப்பள்ளி ஊராட்சி கங்கமடுகு கிராமத்தில் முதுகலை ஆய்வுக்காக கள ஆய்வு மேற்கொண்டபோது, 17-ம் நூற்றாண்டை சேர்ந்த பறை இசைக்கலைஞனின் நடுகல்லை, கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லுாரி வரலாற்று துறை பேராசிரியர் வெங்கடேஸ்வரன் மற்றும் முதுகலை மாணவர் அசோக்குமார் மற்றும் பட்ட ஆய்வாளர் செல்வமணி ஆகியோர் கண்டறிந்தனர்.

இதுகுறித்து பேராசிரியர் வெங்கடேஸ்வரன் கூறியதாவது:- கடந்த ஒரு ஆண்டாக முதுகலை பட்ட ஆய்வுக்காக நாச்சிகுப்பம், மணவாரனப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட கிராமங்களில் கள ஆய்வு மற்றும் புராதன சின்னங்களை ஆவணப்படுத்தும் பணியினை மேற்கொள்ளப்பட்டது. இதில் ஒரு பகுதியாக மணவாரனப்பள்ளி ஊராட்சி கங்கமடுகு கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்ட போது ராமே கவுடு மற்றும் லட்சுமே கவுடு என்ற பெயரில் வழிபாட்டில் உள்ள 13 நடுகற்கள் கண்டறியப்பட்டன. அவை 17-ம் நூற்றாண்டை சேர்ந்த நடுகற்கள் ஆகும். அதில் 11 நடுகற்கள் போரில் இறந்த வீரர்களுக்காக எடுக்கப்பட்டது. இரு நடுகற்கள் இசை கலைஞர்களுக்கு எடுக்கப்பட்டதாகும்.

பறை இசைப்பு

இந்த நடுகல்லில் இசைக்கலைஞர் ஒருவர் பறை இசைக்கருவியை தன்னுடைய இடது தோள் பகுதியில் மாட்டி கொண்டு வலது பக்கமாக லேசாக சாய்ந்தவாறு இசையை ரசித்து பறை அடிப்பது போல் காட்டப்பட்டுள்ளது. மேலும் பறை இசைக்கலைஞர் பறை அடிக்க வலது கையில் அடிக்குச்சி அல்லது உருட்டுக்குச்சியும் இடது கையில் சிம்புக்குச்சி அல்லது சுண்டுகுச்சியும் பறையை இசைப்பது போல் சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.

பறை இசைக்கும் கலைஞரின் தலைமுடி முன்னும் பின்னும் இசைக்கு தகுந்தாற்போல் அசைவது போல் காட்டப்பட்டுள்ளது. பறை இசைக்கலைஞர் கால் சட்டை அணிந்திருப்பது போல் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. மேலும் கால்களில் தண்டைகள், வலது கையில் மட்டும் காப்பு, கழுத்தில் ஒரு அணிகலன் மற்றும் கலைஞரின் உருவத்திற்கு பின்னாள் உரைவாள் ஒன்றும் கீழ் நோக்கி காட்டப்பட்டுள்ளது. மேலும் பறை இசைக்கலைஞரின் அருகில் அவருடன் சேர்ந்து இறந்துபோன அவருடைய மனைவியின் சிற்பமும் செதுக்கப்பட்டுள்ளது. அவருடைய வலது கையில் பறை அடிக்கும் குச்சி ஒன்றும் இடது கையில் மதுக்குடுவையும் பிடித்துள்ளார். இத்துடன் கழுத்தில் ஆறமும், கைகளில் தண்டையும், இடுப்பில் ஒட்டியானமும் அணிந்துள்ளது போல் காட்டப்பட்டுள்ளது.

தமிழ் தொன்மை

இங்கு சிற்பமாக உள்ள இந்த பறை இசைக் கலைஞர் அப்பகுதியில் பெயரும், புகழும் பெற்ற சிறந்த பறை இசைக் கலைஞராக போற்றப்படக்கூடியவராக இருந்திருக்கலாம். எனவே இத்தகைய சிறந்த கலைஞரை அப்பகுதியில் உள்ள மக்கள் அவரை சிறப்பிக்கும் வகையில், அவரையும், அவருடைய மனைவியின் நினைவை போற்றும் வகையிலும் இந்த நடுக்கல்லை எடுத்துள்ளனர்.

இத்தகைய புதிய கண்டுபிடிப்புகள் தமிழின் தொன்மையான அடையாளங்களை மீட்டெடுக்கிறது. அத்தோடு பறை, சங்க காலம் முதல் தகவல் தொடர்பு சாதனமாகவும் விளங்குகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்