< Back
மாநில செய்திகள்
3 நாட்களில் 12 இடங்களில் திருடிய அண்ணன், தம்பி கைது
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

3 நாட்களில் 12 இடங்களில் திருடிய அண்ணன், தம்பி கைது

தினத்தந்தி
|
26 July 2023 12:15 AM IST

சேதுபாவாசத்திரம் அருகே 3 நாட்களில் 12 இடங்களில் திருடிய அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர்.

சேதுபாவாசத்திரம்:

சேதுபாவாசத்திரம் அருகே 3 நாட்களில் 12 இடங்களில் திருடிய அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர்.

கடைகளில் திருட்டு

தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் கடைவீதியில் உள்ள மளிகை கடையில் கடந்த 20-ந் தேதி பூட்டை உடைத்து மர்ம நபர்கள் மளிகை பொருட்கள், சிகரெட் பாக்கெட்டுகளை திருடிச்சென்றனர். அதனை தொடர்ந்து 21-ந் தேதி இரவு பேராவூரணி அருகே உள்ள பூக்கொல்லை கடைவீதியில் செல்போன் கடையின் பூட்டை உடைத்து மடிக்கணினி, செல்போன்களையும், அதே வரிசையில் உள்ள 3 பெட்டிக்கடைகளில் இருந்த பொருட்களையும் மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.

22-ந் தேதி ஒட்டங்காடு, உடையநாடு, வீரியங்கோட்டை ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளிலும் திருட்டு நடந்தது. இதுகுறித்து பேராவூரணி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராம்குமார், சேதுபாவாசத்திரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுமதி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

கண்காணிப்பு கேமரா

விசாரணையின் ஒரு பகுதியாக திருட்டு நடந்த பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் பார்வையிட்டனர். இதில் திருட்டு நடந்த அனைத்து இடங்களிலும் மோட்டார் சைக்கிளில் 2 பேர் வந்து பொருட்களை திருடி, மோட்டார் சைக்கிளில் கொண்டு செல்வது பதிவாகி இருந்தது.

இந்த நிலையில் சேதுபாவாசத்திரம் அருகே கழுமங்குடா பகுதியில் புதிதாக 2 பேர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் போலீசார் அங்கு சென்று அந்த 2 பேரையும் சந்தேகத்தின்பேரில் பிடித்து விசாரணை நடத்தினர்.

வீடு வாடகைக்கு எடுத்து...

விசாரணையில் 2 பேரும் சேதுபாவாசத்திரம் அருகே உள்ள சிவனாம்புஞ்சை கிராமத்தை சேர்ந்த சகோதரர்கள் சுரேஷ் (வயது45), பாஸ்கர் (42) ஆகியோர் என்பதும் ஒவ்வொரு பகுதியிலும் வாடகைக்கு வீடு எடுத்து தங்கியிருந்து அந்தப்பகுதியில் திருடுவதை வாடிக்கையாக கொண்டிருந்ததும் தெரியவந்தது.

பேராவூரணி, சேதுபாவாசத்திரம் பகுதிகளில் மட்டும் 3 நாட்களில் 12 இடங்களில் இவர்கள் தொடர்ந்து திருடி வந்ததும் தெரியவந்தது.

2 பேர் கைது

இதுதொடர்பாக சேதுபாவாசத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து பேராவூரணி கோர்ட்டில் ஆஜர்படுத்தி புதுக்கோட்டை சிறையில் அடைத்தனர். இவர்கள் திருடிச்சென்ற மளிகை பொருட்கள் மற்றும் மடிக்கணினி, செல்போன்களை வீட்டில் பதுக்கி வைத்திருந்தனர். அவற்றையும் சேதுபாவாசத்திரம் போலீசார் பறிமுதல் செய்தனர்.

ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பகுதியில் தங்கியிருந்தபோது இவர்கள் மீது 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்