திண்டுக்கல்
தாமிர உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும்
|தாமிர உற்பத்திக்காக ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று இந்து வியாபாரிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தினார்.
பழனி இந்து வியாபாரிகள் சங்கம் சார்பில், வணிகர் தினவிழா பழனியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. இதற்கு பழனி நகர கவுரவ தலைவரும், சரவணப்பொய்கை கந்தவிலாஸ் உரிமையாளருமான பாஸ்கரன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் ஜெகன், நகர தலைவர் மணிமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ., இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளரும், இந்து முன்னணி பொதுச்செயலாளருமான முருகானந்தம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசினர்.
கூட்டத்தில், சுதந்திர போராட்ட தியாகி வ.உ.சிதம்பரம் பிள்ளை 'சுதேசி கப்பல்' நிறுவனத்தை தொடங்கிய அக்டோபர் 16-ந் தேதியை வணிகர் தினவிழாவாக கொண்டாட வேண்டும், பழனியை ஆன்மிக நகராக அறிவிக்க வேண்டும், பழனி சண்முகநதி உள்ளிட்ட நீர்நிலைகளை தூய்மைப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் நிருபர்களிடம் கூறுகையில், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதால் தாமிரத்துக்காக நம்நாடு வெளிநாட்டை நம்பி இருக்க வேண்டிய நிலை உள்ளது. எனவே தாமிர உற்பத்தியை கருத்தில் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும். அப்போதுதான் தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகமும் மேம்பாடு அடையும் என்றார். கூட்டத்தில் பழனி நகராட்சி தலைவர் உமாமகேஸ்வரி, சித்தனாதன் சன்ஸ் உரிமையாளர் செந்தில், ஓட்டல் கண்பத் கிராண்ட் உரிமையாளர் ஹரிகரமுத்து, சாய்கிருஷ்ணா மருத்துவமனை உரிமையாளர் சுப்புராஜ், அரிமா சங்க நிர்வாகி அசோக் மற்றும் இந்து வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.