< Back
மாநில செய்திகள்
ஓசூரில் நவீன மீன்சந்தை அமைக்க நடவடிக்கை
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

ஓசூரில் நவீன மீன்சந்தை அமைக்க நடவடிக்கை

தினத்தந்தி
|
18 Nov 2022 1:00 AM IST

ஓசூரில் நவீன மீன்சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி கூறினார்.

காவேரிப்பட்டணம்:-

ஓசூரில் நவீன மீன்சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி கூறினார்.

கலெக்டர் ஆய்வு

காவேரிப்பட்டணம் ஊராட்சி ஒன்றியம் குட்டப்பட்டி ஊராட்சியில் மீன்வளத்துறை சார்பில் நடுத்தர அலகு பண்ணைக்குட்டையில் மீன்வளர்க்கும் பணிகளையும், இனப் பொறிப்பகம், கிருஷ்ணகிரி மீன்பண்ணை தாய் மீன்கள் இனவிருத்தி மையம் மற்றும் பொறிப்பக செயல்பாடுகளை கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டி ஆய்வு செய்தார்.

ஆய்வுக்கு பிறகு கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி கூறியதாவது:-

மாவட்டத்தில் 12 மீனவர் கூட்டுறவு சங்கங்கள் இயங்கி வருகிறது. இந்த ்சங்கங்களில் 4 ஆயிரத்து 921 பேர் மொத்த உறுப்பினர்களாக உள்ளனர். 4 நீர்த்தேக்கங்களின் திறந்தவெளி ஒப்பந்தப்புள்ளி மூலம் மீன்பாசி குத்தகை உரிமம் 5 ஆண்டு காலத்திற்கு மீனவர் கூட்டுறவு சங்கங்களுக்கு பெற்று வழங்கப்பட்டு ஆண்டு ஒன்றுக்கு 2020-21-ம் நிதி ஆண்டில் ரூ.6 கோடியே 41 லட்சத்து 52 ஆயிரத்து 86 மதிப்பில் அரசுக்கு வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.

நவீன மீன் சந்தை

மேலும் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 2020-21 ம் நிதி ஆண்டில் பாசன குளங்களில் மிதவை கூண்டுகளில் மீன்வளர்ப்பு திட்டம் ரூ.3 கோடியே 12 லட்சம் மதிப்பில் மானிய தொகை வழங்கப்பட்டுள்ளது. இதேபோல் மாவட்டத்தில் 2020-21 ம் ஆண்டில் ஆறு, குளங்கள், குறுகிய, நீண்ட நீர்நிலைகள், நீர்தேக்கங்கள் மற்றும் குளங்களில் மீன் உற்பத்தி 16,283.81 டன்களாகவும், 2021-22ம் ஆண்டு மீன் உற்பத்தி தற்போது வரை 8,522.41 டன்களாகவும் உள்ளது.

பிரதான் மந்திரி மட்சய சம்படா யோஜனா திட்டத்தின் கீழ் 2021-22 நிதி ஆண்டில் ரூ.32 லட்சத்து 20 ஆயிரம் மானியம் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு தேவையான ஊட்டச்சத்துள்ள உணவான மீன்களை பெற்று பயன்பெற ஏதுவாக ஓசூர் மாநகராட்சி பகுதியில் நவீன மீன் விற்பனை சந்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மீன்குஞ்சு வளர்ப்பு மையம்

பாரூர் கிராமத்தில் ரூ.4 கோடியே 50 லட்சத்தில் கிப்ட் திலேப்பியா மீன்குஞ்சு வளர்ப்பு மையம் கட்டுமானப்பணி தொடங்கப்பட்டு மீன்குஞ்சு வளர்ப்பு மையம் பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இவ்வாறு கலெக்டர் ஜெயசந்திரபானு ரெட்டிகூறினார்.

ஆய்வின் போது தர்மபுரி மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குனர் வேல்முருகன், உதவி இயக்குனர் ரத்தினம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மோகன், ஆய்வாளர் கதிர்வேல், துணை ஆய்வாளர்கள் விக்னேஷ், கோகிலாமணி, தாசில்தார் சம்பத் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்