அரியலூர்
49 அரசு ஐ.டி.ஐ.க்களில் தொழில்நுட்ப மையங்களை இம்மாத இறுதிக்குள் செயல்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை-அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்
|49 அரசு ஐ.டி.ஐ.க்களில் தொழில்நுட்ப மையங்களை இம்மாத இறுதிக்குள் செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார்.
அரியலூர் அரசு ஐ.டி.ஐ.யில் ஆய்வு
அரியலூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தினை (ஐ.டி.ஐ.) தொழிலாளர் நலன்-திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி.கணேசன், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை ஆணையர் வீரராகராவ் முன்னிலையில் நேற்று ஆய்வு செய்தார். அப்போது அமைச்சர் சி.வி.கணேசன் மாணவர்கள் மேற்கொண்ட செய்முறைகள் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற வகையில் புதிய முதலீட்டாளர்கள் தமிழ்நாட்டை நோக்கி வருகிறார்கள். இவ்வகையான தொழில் நிறுவனங்களில் பணிபுரியும் வகையில் புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய பயிற்சி மாணவர்களுக்கு வழங்கும் விதமாக ரூ.2 ஆயிரத்து 878 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தகைய தொழில்நுட்ப மையங்களை உருவாக்கிடும் வகையில் டாடா டெக்னாலஜியுடன் இணைந்து தமிழ்நாட்டில் உள்ள 71 அரசு தொழிற்பயிற்சி மையங்களில் புதியதாக தொழில்நுட்ப மையங்களை ஏற்படுத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் பணிகள் முடிவுற்ற 22 தொழில்நுட்ப மையங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். மீதமுள்ள 49 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் இம்மாத இறுதிக்குள் செயல்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
4.0 தொழில்நுட்ப மையம்
இதன் மூலம் உலகத்தரம் வாய்ந்த அயல்நாட்டில் வழங்க பெறும் பயிற்சிகள் அனைத்தும், இத்தொழில் நுட்பமையங்கள் மூலமாக மாணவர்களுக்கு கிடைக்க பெறும். இதனை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் செயல்படுத்தியுள்ளார். இந்த 4.0 தொழில் நுட்ப மையத்தில் சி.என்.சி. டர்னிங் சென்டர், செங்குத்து எந்திர மையம், லேசர் வெட்டும் எந்திரம், தொழில்துறை ரோபோ, மின் வாகனம், 3டி பிரிண்டர் போன்ற நவீன எந்திரங்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளது.
இந்த தொழிற்பிரிவுகளுக்கு 104 பயிற்சியாளர்கள் பயிற்சி பெறும் வகையில் இந்த எந்திரங்கள் கொள்முதல் செய்யப்பட்டு நிறுவப்பட்டுள்ளன. மேலும் இந்த கல்வியாண்டு முதல் புதிதாக தொடங்கப்படவுள்ள அரியலூர் மற்றும் ஏனைய 4.0 தொழில் நுட்ப மையங்களில் உற்பத்தி செயல்முறை கட்டுப்பாடு மற்றும் ஆட்டோமேஷன், மேம்பட்ட சி.என்.சி. எந்திர தொழில்நுட்ப வல்லுனர், தொழில்துறை ரோபாட்டிக்ஸ் மற்றும் டிஜிட்டல் உற்பத்தி தொழில்நுட்ப வல்லுனர் போன்ற தொழில்பிரிவுகள் தொடங்கப்படவுள்ளன. இப்பிரிவுகளில் கூடுதலாக 104 பயிற்சியாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
சிமெண்டு ஆலைகளில் பணி...
இதையடுத்து, அரியலூர் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தினை ஆய்வு செய்ததில் தேவைப்படும் இடங்களில் மராமத்து பணிகளை செய்திடவும், முழுமையாக கட்டிடங்களுக்கு வண்ணங்கள் அடித்திடவும், அரசால் ரூ.75 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணிகளை விரைவாக தொடங்கி மாணவர்களுக்கு இடையூறு இல்லாமல் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. பணிமனையில் பழுதடைந்திருந்த எந்திரங்கள் ஏலம் விடப்பட்டுள்ளதையும் அதற்கு புதிய எந்திரங்கள் நிறுவப்படும் எனவும் ஆய்வில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இப்பயிற்சி நிலையத்தினை பசுமையான பயிற்சி நிலையமாக மாற்றிடவும், தேவையான இடங்களில் முட்புதர்களை அகற்றி மரக்கன்றுகளை நட்டு வளாகத்தினை தூய்மையாக பராமரித்திடவும், பயிற்சி நிலையத்தில் 2023-ம் ஆண்டிற்கான பயிற்சியாளர் சேர்க்கை முழு அளவில் காலியிடமின்றி சேர்க்கை செய்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும், அரியலூர் மாணவர்கள் இங்குள்ள சிமெண்டு ஆலைகளில் பணிபுரிவதற்கான நவீன தொழில்நுட்பங்களை பயின்று வேலை வாய்ப்பை பெறும் வகையில் தொழில்நுட்ப மையங்களில் பயிற்சி வழங்க முதல்-அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும், என்று அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார்.
இந்த ஆய்வின் போது விழுப்புரம் மண்டல பயிற்சி இணை இயக்குனர் ஜான் போஸ்கோ, தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் நாகராஜன், ஆசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.