கரூர்
குளித்தலை நீதிமன்றத்தில் லிப்ட் வசதி ஏற்படுத்த நடவடிக்கை: மாவட்ட முதன்மை நீதிபதி தகவல்
|குளித்தலை நீதிமன்றத்தில் லிப்ட் வசதி ஏற்படுத்த நடவடிக்கை மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் கூறினார்.
வருடாந்திர ஆய்வு
கரூர் மாவட்டம், குளித்தலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் நேற்று வருடாந்திர ஆய்வு மேற்கொண்டார். அப்போது நீதிமன்றத்தில் உள்ள கோப்புகள், ஆவணங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவருக்கு குளித்தலை வக்கீல் சங்கம் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதற்கு குளித்தலை வக்கீல் சங்க தலைவர் சாகுல் அமீது தலைமை தாங்கினார். செயலாளர் நாகராஜன் முன்னிலை வகித்தார்.
இதையடுத்து மாவட்ட முதன்மை நீதிபதி சண்முகசுந்தரம் ேபசினார். அப்போது அவர் கூறியதாவது:-
நீதித்துறையும், வக்கீல்களும் ஒரு நாணயத்தின் இரு பக்கங்கள் போன்றது. ஒரு வண்டிக்கு இரண்டு சக்கரங்கள் போல இருவரும் சேர்ந்து பணியாற்றினால்தான் நீதி பரிபாலனை சரியாக இருக்கும். பொதுமக்களுக்கு பயனுள்ளதாக அமையும். குளித்தலையில் கூடுதல் மாவட்ட உரிமையில் நீதிமன்றம் அமைக்க தேவையான பணிகள் முடிவடை உள்ளது. வழக்குகளின் எண்ணிக்கை அதிக அளவு இருப்பதால் இங்கு கூடுதல் சார்பு நீதிமன்றம் கொண்டுவர தேவையான பணிகள் தொடங்கப்பட்டு விட்டது.
லிப்ட் வசதிக்கு நடவடிக்கை
கரூர் மற்றும் குளித்தலையில் மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாய நீதிமன்றம் கொண்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டு விரைவில் அரசிடமிருந்து சாதகமான பதில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வக்கீல் சங்கத்தின் கோரிக்கை படி வரும் 2023-2024-ம் ஆண்டு பராமரிப்பு பணியில் குளித்தலை நீதிமன்றத்தில் லிப்ட் வசதி ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும். கேண்டீன் கொண்டுவர ஜகோர்ட்டுக்கு கருத்துரு அனுப்பப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் குளித்தலை ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதிகள் சண்முக கனி, பாலமுருகன், தினேஷ்குமார், பிரகதீஸ்வரன், வக்கீல்கள் அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.