சென்னை
பம்மல், குரோம்பேட்டை, அஸ்தினாபுரம் பகுதியில் சாலைகளை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
|பம்மல், குரோம்பேட்டை, அஸ்தினாபுரம் பகுதிகளில் போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் வகையில் சாலைகளை அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் கருத்துக்கேட்பு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
சென்னை பெருநகர பகுதிகளுக்கான மூன்றாம் முழுமை திட்டம் 2027 -2042 தொலைநோக்கு ஆவணம் தயாரித்தல் குறித்து பொதுமக்களிடம் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்று வருகிறது. பம்மல் பகுதியில் நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி 1-வது மண்டல குழு தலைவர் வே.கருணாநிதி, பொழிச்சலூர் ஊராட்சி மன்ற தலைவர் வனஜா மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழும அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பொதுநல சங்கங்கள், பொதுமக்கள், மாநகராட்சி உறுப்பினர்கள் பல்வேறு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.
இந்த கருத்து கேட்புகூட்டத்தில் கலந்து கொண்ட தாம்பரம் மாநகராட்சி 1-வது மண்டல குழு தலைவர் வே.கருணாநிதி பேசுகையில், பல்லாவரம் ஜி.எஸ்.டி.சாலையிலிருந்து பம்மல் பகுதிக்கு வாகனங்கள் செல்லும் வகையில் ஜி.எஸ்.டி.சாலையில் செல்லும் மேம்பாலத்தை இணைக்கவும், திருநீர்மலை சாலை பகுதியிலும் மேம்பாலத்தை இணைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பம்மல் பகுதியில் பொதுமக்கள் வசதிக்கு பஸ் நிலையம் அமைத்து தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
அதேபோல் நத்தம் பகுதியில் குடியிருக்கும் பொதுமக்களுக்கு வீடுகள் கட்ட பட்டா பெறுவதில் சிக்கல் உள்ளதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறார்கள். கடந்த 2006-2011-ம் ஆண்டில் கிராம நிர்வாக அலுவலர் சான்றிதழ் பெற்று கட்டிட அனுமதி பெற நடைமுறை இருந்தது.
தற்போது நத்தம் நிலங்களில் பட்டா பெற கடுமையான நடைமுறை இருப்பதாகவும், பழைய நடைமுறைப்படி வீடுகள் கட்ட சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் அனுமதி அளிக்க வேண்டும் என்றும், திருப்பனந்தாள் ஏரி, சூரியம்மன்குளம் ஆகியவற்றை ஆழப்படுத்தி பொதுமக்கள் தேவைக்கு நிலத்தடி நீரை பயன்படும் வகையில் மாற்றி அமைக்க சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தார்.
கூட்டத்தில் பேசிய பொதுநல சங்கங்களின் நிர்வாகிகள், பம்மல் மெயின் ரோடு-குன்றத்தூர் சாலை, பொழிச்சலூர் நெடுஞ்சாலை,
பம்மல் மெயின் ரோடு-திருநீர்மலை காமராஜபுரம் சாலை, பம்மல் அண்ணா நகர் மார்க்கெட் சாலை. ஜி.எஸ்.டி. சாலையில் இருந்து திருநீர்மலை திருமுடிவாக்கம் செல்லும் சாலைகளை போக்குவரத்து நெருக்கடியை குறைக்கும் விதமாக அகலப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.
குரோம்பேட்டை, அஸ்தினாபுரம் பகுதியில் நடைபெற்ற கருத்துக்கேட்பு கூட்டத்தில் தாம்பரம் எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் எம்.எல்.ஏ. இ.கருணாநிதி, மண்டல தலைவர்கள் பிரதீப் சந்திரன், ஜோசப் அண்ணாதுரை, மாநகராட்சி உறுப்பினர்கள், பொதுநலச்சங்கத்தினர் கலந்து கொண்டனர். கூட்டத்தில், பாதாள சாக்கடை திட்டத்தையும், மெட்ரோ குடிநீரையும் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சேர்க்க வேண்டும், சாலைகளை அகலப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவாக அளித்தனர்.
சென்னை மாநகரின் அசுர வளர்ச்சியை கருத்தில் கொண்டு, அதன் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடும் வகையிலும், மாநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையிலும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் (சி.எம்.டி.ஏ.) பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் இக்குழுமத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டு வரும் திட்டங்கள் குறித்த ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது.
இந்த கூட்டத்திற்கு அமைச்சர் பி.கே.சேகர்பாபு தலைமை தாங்கினார். அப்போது சென்னை பெருநகர பகுதியல் ஏரிக்கரை மற்றும் நீர்முனை மேம்பாடு, சென்னை கடற்கரையோரம் மறு சீரமைப்பு மற்றும் புத்தாக்க திட்டம், செங்கல்பட்டு மற்றும் மாமல்லபுரம் புது பஸ் நிலையத் திட்டங்கள், இணையவழி திட்ட அனுமதி வழங்குதல் குறித்த உள்ளிட்ட பல வருங்கால அறிவிப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது.