< Back
மாநில செய்திகள்
பக்ரைன் சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் - சீமான்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

பக்ரைன் சிறையில் வாடும் தமிழக மீனவர்களை மீட்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் - சீமான்

தினத்தந்தி
|
14 Oct 2024 10:59 AM IST

பக்ரைன் நாட்டு சிறையில் வாடும் 28 தமிழ்நாட்டு மீனவர்களை விடுவித்து தாயகம் மீட்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.

சென்னை,

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம், இடிந்தகரை பகுதியைச் சேர்ந்த 28 மீனவர்கள் ஈரான் நாட்டில் மீன்பிடித்தொழில் செய்து வந்த நிலையில், காற்றின் திசை மாறுபாடு காரணமாக அவர்களின் படகு பக்ரைன் நாட்டின் எல்லைக்குள் தவறுதலாகச் சென்றதால் கடந்த செப்டம்பர் மாதம் 11-ம் தேதி அந்நாட்டின் கடலோரக் காவற்படையால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 28 தமிழ்நாட்டு மீனவர்களையும் விடுவிக்க தூதரக அதிகாரிகள் மூலம் உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு அரசு மற்றும் மத்திய அரசிடம் மீனவர்களின் உறவினர்கள் கண்ணீருடன் கோரிக்கை வைத்த நிலையிலும், மத்திய, மாநில அரசுகளின் அலட்சியத்தால் பக்ரைன் நீதிமன்றம் 28 மீனவர்களுக்கும், 6 மாதகால சிறைதண்டனை விதித்துள்ளது. இதனால் மீனவர்களின் வருமானத்தை நம்பி, அதையே வாழ்வாதாரமாக கொண்ட அவர்களது குடும்பங்கள் செய்வதறியாது தவித்துப்போயுள்ளனர்.

திடிரென்று நிகழ்ந்த இயற்கைச்சூழல் மாற்றத்தால் நிகழ்ந்த எதிர்பாராத தவறுக்கு ஆறுமாத காலம் தண்டனை என்பது மிக கொடுமையானதாகும். ஆகவே, மத்திய பா.ஜ.க. அரசு, பக்ரைன் நாட்டு அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி கைது செய்யப்பட்ட 28 மீனவர்களையும் விடுவிக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகிறேன்.

தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஸ்டாலின் வழக்கம்போல மீனவர்களை விடுவிக்க வேண்டுமென்று இந்திய வெளியுறவுத்துறை மந்திரிக்கு கடிதம் எழுதியதோடு கடமையை முடித்துக்கொண்டது மிகுந்த ஏமாற்றமும், வேதனையும் அளிக்கிறது. எல்லாவற்றிற்கும் கடிதம் மட்டுமே எழுத முடியும் என்றால் அயலகத் தமிழர் நலத்துறை என்றொரு அமைச்சகம் தமிழ்நாடு அரசுக்கு எதற்கு? என்ற கேள்வியும் எழுகிறது.

ஆகவே, இலங்கை அரசால் கைது செய்யப்படும் தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்க எவ்வித நடிவடிக்கையும் எடுக்காமல் அக்கொடுமைகளைத் தொடர்ச்சியாக அனுமதிப்பதுபோல் அல்லாமல், பக்ரைன் அரசால் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விடுவிக்க நாடாளுமன்றத்தில் கூட்டணி பலத்தோடு 40 உறுப்பினர்களை கொண்டுள்ள தி.மு.க., மத்திய அரசினை வலியுறுத்தி, தூதரகம் மூலம் மீனவர்களுக்கு உரிய சட்ட உதவிகள் கிடைப்பதற்கும், மீனவர்களை விடுவித்து அவர்களின் குடும்பங்களிடம் பாதுகாப்பாகச் சேர்ப்பதற்கும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென இவ்வறிக்கையின் வாயிலாகக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்