< Back
மாநில செய்திகள்
ஆவின் பொருட்கள் மீதான வரியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
மாநில செய்திகள்

ஆவின் பொருட்கள் மீதான வரியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
22 July 2022 2:46 PM IST

ஆவின் பொருட்கள் மீதான வரியை நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரில் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அண்மையில் நடைபெற்ற பொருட்கள் மற்றும் சேவைகள் வரி குழுக் கூட்டத்தில், பொட்டலங்களில் அடைக்கப்பட்ட அரிசி, கோதுமை, உள்ளிட்ட பல்வேறு உணவுப் பொருட்களுக்கு 5 சதவீதம், பொருட்கள் மற்றும் சேவைகள் வரி விதிக்கவும், நெய் மீது 12 சதவீதம் வரி விதிக்கவும் முடிவு எடுக்கப்பட்டதன் அடிப்படையில், இந்த மாதம் 18-ந்தேதி முதல் மேற்படி பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.

பொதுமக்கள் அன்றாடம் வாங்கும் பொருட்களான தயிர், மோர், நெய், லஸ்ஸி ஆகிய பொருட்கள் மீது பொருட்கள் மற்றும் சேவைகள் வரியை ஆவின் நிறுவனம் விதித்து இருப்பது பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விலை உயர்வுக்கு அ.தி.மு.க. சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திரும்பப்பெற வேண்டும்

சொத்து வரி இரட்டிப்பாக உயர்த்தப்பட்டு இருக்கின்ற நிலையில், மின் கட்டணம் உயர இருக்கின்ற நிலையில், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பொருட்கள் மீது 5 சதவீதம் பொருட்கள் மற்றும் சேவைகள் வரியை விதித்து இருப்பதும், இதன் அடிப்படையில் ஆவின் பொருட்களின் விலையை உயர்த்தியிருப்பதும் ஏழையெளிய மக்களை வாட்டி வதைக்கும் செயல். இவற்றை திரும்பப் பெற வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

எனவே, பொதுமக்களின் எதிர்பார்ப்பினை பூர்த்தி செய்யும் வகையில், ஆவின் பொருட்கள் மீதான வரி உட்பட, பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் பொருட்களுக்கு விதிக்கப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் சேவைகள் வரியை திரும்பப் பெற தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகளை அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்