ராமநாதபுரம்
மீண்டும் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்
|மீண்டும் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் நர்சுகள் மனு கொடுத்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி கோவிட் கால செவிலியர்கள் சங்கத்தின் சார்பில் கலெக்டர் அலுவலகத்திற்கு நர்சுகள் திரளாக வந்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கொரோனா காலத்தில் அவசர அத்தியாவசிய தேவையை கருத்தில் கொண்டு மருத்துவ தேர்வாணையத்தின் சார்பில் முறையாக தேர்வு வைத்து எங்களை பணியில் சேர்த்தனர். 8 ஆயிரம் பேர் தேர்வான நிலையில் 3 ஆயிரத்து 600 பேர் மட்டுமே அப்போதைய இக்கட்டான சூழ்நிலையிலும் பணியாற்ற முன்வந்தோம். அன்று முதல் 2 ஆண்டுகள் 7 மாதம் பணியாற்றி வந்த நாங்கள் கொரோனா காலத்தில் தொற்றுக்கு உள்ளாகியதோடு வீட்டில் உள்ளவர்களை மறந்து மக்கள் நலனை கருதி பணியாற்றி வந்தோம். தற்போது எங்களை பணிநீக்கம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த 6 மாத காலமாக ஊதியம் வழங்கப்படவில்லை. எங்களின் அவசர கால சேவையை மனதில் கொண்டு எங்களுக்கு அரசு மீண்டும் பணி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.