காஞ்சிபுரம்
நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - தொழிற்சாலை பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் பேச்சு
|நீர்நிலைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழிற்சாலை பிரதிநிதிகளுடனான ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்தார்.
காஞ்சீபுரம் மாவட்டத்தில் 5 சிப்காட், 2 சிட்கோ தொழிற் பூங்கா மற்றும் 2 ஆயிரத்துக்கும் அதிகமான தொழில் நிறுவனங்கள் 10 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்களுடன் இயங்கி வருகின்றன.
அதிவேக தொழில் வளர்ச்சி மற்றும் நகரமயமாக்கல் காரணமாக, மாவட்டத்தில் உள்ள குளம், ஏரி, ஊரணிகளில் இருந்து தொழிற்சாலைகளின் நீர் தேவைகளுக்காக தண்ணீர் எடுக்கப்படுகின்றன. மேலும் மாவட்டத்தில் உள்ள செம்பரம்பாக்கம் ஏரி சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகின்றது.
கடந்த ஆண்டு அதிகபடியான மழையால் காஞ்சீபுரம் மாவட்டம் பெரும் வெள்ளத்தை சந்தித்தது. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, தங்குவதற்கு இடம் மற்றும் மருத்துவ வசதிகள் தொழில் நிறுவனங்களின் உதவியுடன் மாவட்ட நிர்வாகம் சிறப்பாக செயல்படுத்தியது.
மாவட்ட கலெக்டர் அலுவலக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் தொழில் நிறுவனங்களின் பிரதிநிதிகள், அனைத்து உள்ளாட்சித்துறை அலுவலர்களுடன் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தால் மாவட்ட கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆர்த்தி பேசியதாவது:- தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்காத இயற்கையில் கிடைக்கும் மாற்றுப் பொருட்களை பயன்படுத்தவும்.
மஞ்சப்பை போன்ற துணிப்பைகளின் பயன்பாட்டை அதிகபடுத்தவும், தொழிற்சாலைகள் தங்கள் வளாகத்திற்குள் இயன்றவரை மரக்கன்றுகளை வைத்து பசுமைபோர்வையை அதிகப்படுத்த வேண்டும். தொழிற்சாலைகள் தங்கள் தொழிற்சாலையில் உருவாகும் திடக்கழிவுகளை திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2016-ன் படி முறையாக கையாளுமாறும்,
தொழிற்சாலைகள் தங்கள் தொழிற்சாலையின் அருகில் உள்ள குடியிருப்புகளில் 75-வது சுதந்திர தினத்தையொட்டி அனைத்து வீடுகளிலும் தேசியகொடியை வழங்கி சிறப்பாக கொண்டாட வேண்டும். தொழிற்சாலைகள் அருகில் உள்ள நீர் நிலைகளை பராமரிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
இந்த ஆய்வு கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஸ்ரீதேவி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் ரவிச்சந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.