< Back
மாநில செய்திகள்
ஈரப்பதம் அதிகம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்
மாநில செய்திகள்

ஈரப்பதம் அதிகம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
11 Oct 2022 2:58 PM IST

மத்திய அரசின் அனுமதியை விரைவாக பெற்று ஈரப்பதம் அதிகம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

காவிரி பாசன மாவட்டங்களில் பெய்து வரும் மழை காரணமாக விற்பனைக்காக கொள்முதல் நிலையங்களுக்கு உழவர்கள் கொண்டு வந்துள்ள நெல் மணிகள் நனைந்து ஈரமாகியுள்ளன அதனால், அனுமதிக்கப்பட்ட அளவை விட ஈரப்பதம் அதிகரித்திருப்பதால், அரும்பாடுபட்டு விளைவித்த நெல்லை, தேவைக்கு ஏற்ப விற்பனை செய்ய முடியாத நிலைக்கு உழவர்கள் தள்ளப்பட்டிருப்பது வருத்தம் அளிக்கிறது.

மழையில் நனைந்து ஈரமான நெல்லை உழவர்கள் பகல் நேரத்தில் சாலையில் காய வைக்கின்றனர். ஆனால், இரவு நேரத்தில் மீண்டும் பெய்யும் மழை அல்லது பனியால் நெல் மீண்டும் ஈரப்பதமாகி விடுகிறது. இதனால், நெல்லின் ஈரப்பதம் குறையாததால் அந்த நெல்லை பல நாட்களாக விவசாயிகளால் விற்பனை செய்ய முடியவில்லை.

கொள்முதல் நிலையங்களில் நெல்லை விற்பனை செய்ய முடியாததால் பல ஊர்களில் அடிமாட்டு விலைக்கு நெல்லை விற்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த விஷயத்தில் தாமதிக்கப்படும் ஒவ்வொரு மணி நேரமும் மிக நீண்ட காலமாகும். இந்த அவசரத்தையும், உழவர்களின் நலனையும் புரிந்து கொண்டு, மத்திய அரசின் அனுமதியை விரைவாகப் பெற்று ஈரப்பதம் அதிகம் உள்ள நெல்லை கொள்முதல் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்