< Back
மாநில செய்திகள்
அரசுத்துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - டி.டி.வி.தினகரன்

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

அரசுத்துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்ப நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - டி.டி.வி.தினகரன்

தினத்தந்தி
|
27 Aug 2024 1:47 PM IST

அரசுத்துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்பத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என டி.டி.வி.தினகரன் கூறியுள்ளார்.

சென்னை,

அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது,

தமிழகத்தில் தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல் தற்போது வரை அரசின் அனைத்துத் துறைகளிலும் எந்தவித வரைமுறையும், வழிகாட்டுதலுமின்றி ஆலோசகர்கள் நியமிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

அரசின் திட்டங்களை செயல்படுத்துவதிலும், அரசு நிர்வாகத்தை திறம்பட நடத்துவதிலும் அச்சாணிகளாக பல்வேறு நிலைகளில் பணியாற்றிவரும் அரசு ஊழியர்களின் முக்கியத்துவத்தையும், திறமையையும் புறந்தள்ளிவிட்டு ஆலோசகர்களை நியமித்து கொள்கை முடிவுகளை மேற்கொள்ள முயற்சிக்கும் தி.மு.க. அரசின் நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது.

தமிழக அரசின் பல்வேறு துறைகளில் நிலவும் 3.5 லட்சத்திற்கும் அதிகமான காலிப்பணியிடங்களை நிரப்ப எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல், அரசுப் பணிக்கு எந்தவித தொடர்பும் இல்லாத ஆலோசகர்களை நியமிப்பது சமூகநீதிக்கும், இட ஒதுக்கீட்டிற்கும் எதிரான நடவடிக்கை என தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

எனவே, இளைய சமுதாயத்தின் எதிர்காலத்தை சீரழிக்கும் வகையில் நடைபெற்று வரும் ஆலோசகர்களின் நியமனங்களை முற்றிலுமாக கைவிடுவதோடு, அரசுத்துறைகளில் காலியாக இருக்கும் பணியிடங்களை நிரப்பத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.




மேலும் செய்திகள்