< Back
மாநில செய்திகள்
அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களை அரசு கல்லூரிகளிலேயே பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்
மாநில செய்திகள்

அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களை அரசு கல்லூரிகளிலேயே பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஓ.பன்னீர்செல்வம்

தினத்தந்தி
|
4 Oct 2023 11:49 PM IST

அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்களை அரசு கல்லூரிகளிலேயே பணியமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது:-

நாட்டை வளப்படுத்துவதிலும், மக்களை மேம்படுத்துவதிலும், அறிவு சார்ந்த சமுதாயத்தை உருவாக்குவதிலும் முக்கியப் பங்கு வகிப்பது உயர் கல்வி என்று சொன்னால் அது மிகையாகாது. உயர் கல்வி வளர்ந்தால் மட்டுமே புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சிகள் போன்றவை வளர்ச்சிப் பெற்று உலக அரங்கில் தமிழ்நாடு தனிச் சிறப்புடன் விளங்க முடியும். இப்படிப்பட்ட இன்றியமையாத் தன்மை வாய்ந்த உயர் கல்வி வளர்ச்சி பெற வேண்டுமானால், உயர் கல்வியை போதிக்கும் பேராசிரியர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகாமல் இருக்க வேண்டும். இதனை உறுதி செய்ய வேண்டிய கடமையும், பொறுப்பும் மாநில அரசாங்கத்திற்கு உள்ளது.

1929 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த பல்கலைக்கழகமாகும். இந்தப் பல்கலைக்கழகம் நிதி நெருக்கடியில் சிக்கித் தவித்தபோது, ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியரின் நலனைக் கருத்தில் கொண்டு, இந்தப் பல்கலைக்கழகத்தை அரசே எடுத்துக் கொள்ளும் வகையில் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் சட்டமுன்வடிவு இயற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டது. இதனை செய்து காட்டியவர் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா.

இதனைத் தொடர்ந்து, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தேவைக்கு அதிகமாக பணியாற்றிக் கொண்டிருந்த பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் உள்ளிட்டோர் அரசு கல்லூரிகளுக்கு அயல் பணியில் மாற்றப்பட்டனர். தற்போதைய நிலையில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பணியாற்றிய ஆயிரத்திற்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்கள் அரசுக் கல்லூரிகளில் அயற் பணியில் பணிபுரிந்து வருகிறார்கள்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து அரசு கல்லூரிகளுக்கு மாற்றப்பட்ட பேராசிரியர்களுக்கு எவ்வித பதவி உயர்வும் அளிக்கப்படுவதில்லை என்றும்; அவர்களை மீண்டும் அண்ணாமலை பல்கலைக்கழகத்திற்கே திரும்ப எடுத்துக் கொள்வோம் என்ற வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்றும்; அனுபவமும், தகுதியும் அதிகமாக இருந்தும் எவ்விதமான நிர்வாகப் பொறுப்பும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை என்றும்; அவர்கள் கவுரவ விரிவுரையாளர்கள் போல நடத்தப்படுவதாகவும்; ஆராய்ச்சி மாணவர்களுக்கு வழிகாட்டியாக நியமிக்கப்படுவதில்லை என்றும்; இவர்களை விட வயதிலும், அனுபவத்திலும் குறைந்தவர்களுக்கு நிர்வாக பொறுப்புகள் அளிக்கப்படுகின்றன என்றும் கூறப்படுகிறது. இதற்கெல்லாம் காரணம் அவர்கள் அரசுக் கல்லூரிகளில் அயற் பணியில் பணிபுரிகிறார்கள் என்பதுதான் என்று பாதிக்கப்பட்ட பேராசிரியர்கள் தெரிவிக்கின்றனர். இதற்கு ஒரே தீர்வு, அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து அரசுக் கல்லூரிகளுக்கு அயற் பணியில் மாற்றப்பட்ட பேராசிரியர்கள் அந்தந்த அரசுக் கல்லூரிகளிலேயே பேராசிரியர்களாக பணியமர்த்தப்பட வேண்டும். இதன்மூலம் கூடுதல் நிதிச் சுமை ஏதும் அரசுக்கு ஏற்படாது.

எனவே, இந்தப் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலிருந்து அரசுக் கல்லூரிகளில் அயற் பணியில் பணியமர்த்தப்பட்ட பேராசிரியர்கள் மற்றும் உதவிப் பேராசிரியர்களை அந்தந்த கல்லூரிகளிலேயே பணியமர்த்தி, அவர்களுடைய மனஉளைச்சலைத் தடுத்து நிறுத்தவும், அவர்கள் பதவி உயர்வு பெறவும் வழிவகை செய்ய வேண்டுமென்று முதல்-அமைச்சரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் தெரிவித்து உள்ளார்.

மேலும் செய்திகள்