கள்ளக்குறிச்சி
பயணிகள் நிழற்குடை, குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை
|‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி பயணிகள் நிழற்குடை, குடிநீர் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை அதிகாரிகளுக்கு எம்.எல்.ஏ. உத்தரவு
தியாகதுருகம்
கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தியாதுருகம் பேரூராட்சி அலுவலகத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கிருந்த பேரூராட்சி செயல் அலுவலர் கண்ணனிடம் பேரூராட்சியில் நிறைவேற்றப்பட்டுள்ள மற்றும் நடைபெற்று வரும் பணிகள், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள திட்டப்பணிகள் குறித்து கேட்டறிந்த அவர் பெரியமாம்பட்டு பகுதியில் தினமும் குப்பைகளை அள்ள வேண்டும், தியாகதுருகத்தில் சேலம் மெயின் ரோடு பகுதியில் சாலை விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், புதிய தார்ச்சாலை அமைக்கும் பகுதியில் சாலையின் நடுவே உள்ள கம்பங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
தொடர்ந்து தினத்தந்தி நாளிதழில் 9 ஆண்டுகளாக காட்சிப் பொருளாக இருக்கும் பயணிகள் நிழற்குடை, சமுதாயக்கூடம், குடிநீர் தொட்டி பயன்பாட்டிற்கு வருமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு என வெளியான கட்டுரை மற்றும் புகைப்படங்களை சுட்டிக்காட்டி இந்தப் பணிகள் ஏன் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரவில்லை? என கேட்டறிந்த அவர் இவற்றை உடனடியாக பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். அப்போது அ.தி.மு.க. நகர செயலாளர் ஷியாம் சுந்தர், தியாகதுருகம் கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, பேரூராட்சி இளநிலை உதவியாளர் கொளஞ்சிவேலு, இளநிலை பொறியாளர் சீனிவாசன், குடிநீர் திட்ட பராமரிப்பாளர் கண்ணன், கணினி உதவியாளர் முத்து ஆகியோர் உடன் இருந்தனர்.