திருவள்ளூர்
பட்டப்பகலில் கோவில் கருவறைக்குள் புகுந்து நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு; மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
|பட்டப்பகலில் கோவில் கருவறைக்குள் புகுந்து சாமி கழுத்தில் கிடந்த தங்க தாலி மற்றும் வெள்ளி பொருட்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
கோவில் கருவறைக்குள் புகுந்து
கும்மிடிப்பூண்டி அடுத்த புதுகும்மிடிப்பூண்டியில் ஸ்ரீ ருக்குமணி சத்யபாமா சமேத ஸ்ரீ கிருஷ்ணர் கோவில் உள்ளது. நேற்று காலை கோவிலை திறந்து வைத்து விட்டு பூசாரி லட்சுமிபதி (வயது 39) பூஜை பொருட்களை வாங்க வெளியே சென்றார். பின்னர் மீண்டும் கோவிலுக்கு வந்தார். அப்போது கோவில் கருவறைக்குள் புகுந்த மர்ம நபர்கள் மூலவர் மற்றும் உற்சவர்களான ருக்குமணி, சத்யபாமா கழுத்தில் கிடந்த 2 பவுன் தாலி மற்றும் வெள்ளி பொருட்களை திருடி சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கோவிலில் ஆள் நடமாட்டம் இருந்ததால் கருவறையில் இருந்த 140 கிலோ எடை கொண்ட பஞ்சலோக உற்சவர் சிலைகள் தப்பியது.
இதுகுறித்து அவர் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசில் புகார் அளித்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பட்டப்பகலில் கோவில் கருவறைக்குள் புகுந்து கைவரிசை காட்டிய மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
மற்றொரு சம்பவம்
மீஞ்சூர் சூர்யா நகரில் வசிப்பவர் சுரேஷ் (28). இவர் வீட்டின் அருகே அரிசி கடை நடத்தி வருகிறார். கடந்த 6-ந்தேதி இவரது கடையின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் கல்லாவில் இருந்த ரூ.80 ஆயிரத்தை திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் வழக்கு தொடர்பாக சென்னை வியாசர்பாடி எழில் நகரை சார்ந்த முனியாண்டி (20) மற்றும் 18 வயதுடைய 2 சிறுவர்களை சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் பிடித்து விசாரித்ததில் அவர்கள் அரிசி கடையில் திருட்டியது தெரிய வந்தது. பின்னர் 3 பேரையும் கைது செய்த போலீசார் பொன்னேரி குற்றவியல் நடுவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.