சென்னை
ஆட்டோவில் சென்று செல்போன் வழிப்பறி - 3 பேர் கைது
|சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் ஆட்டோவில் சென்று செல்போன் வழிப்பறியில் ஈடுப்பட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 32). சரக்கு வாகன ஓட்டுனர். இவர் வேலை நிமித்தமாக சென்னை வந்திருந்தார். அவர், சிந்தாதிரிப்பேட்டை டேம்ஸ் சாலை வழியாக நடந்து சென்ற போது அவரது செல்போனை மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் கும்பல் வழிப்பறி செய்து தப்பியது.
இந்த சம்பவம் குறித்து விஜயகுமார், சிந்தாதிரிப்பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில் போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் செல்போன் வழிப்பறிப்பில் ஈடுபட்டது எண்ணூர் அத்திப்பட்டு பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த அரவிந்தன் என்கிற கடுகு (20), பீட்டர் (22), தண்டையார்பேட்டை அஜீஸ்நகர் 2-வது தெருவை சேர்ந்த ஜீவா (22) ஆகிய 3 பேர் என்பது தெரியவந்தது. அவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 6 திருட்டு செல்போன்களும், ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட பீட்டர் மீது 4 திருட்டு வழக்குகளும், ஜீவா மீது ஒரு கொலை முயற்சி உள்பட 2 வழக்குகளும் இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.