< Back
மாநில செய்திகள்
குற்றால அருவிகளில் சீராக விழுந்த தண்ணீர் - சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
மாநில செய்திகள்

குற்றால அருவிகளில் சீராக விழுந்த தண்ணீர் - சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்

தினத்தந்தி
|
24 July 2022 5:14 PM IST

குற்றாலத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளித்தது மட்டுமல்லாமல் படகு சவாரியிலும் ஆர்வம் காட்டினர்.

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் ஆண்டுதோறும் ஜூன், ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் சீசன் இருக்கும். இந்த சீசனின் போது சாரல் மழை விட்டு விட்டு பெய்யும், குளிர்ந்த காற்று மற்றும் அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கோட்டும்.

இந்த சீசனை அனுபவித்து அருவிகளில் குளித்து மகிழ ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்தை நோக்கி படையெடுப்பார்கள்.

இந்த ஆண்டு சீசன் காலதாமதமாகவே தொடங்கியது. இந்த நிலையில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த சாரல் மழையினால் இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டியது.

தற்போது கடந்த மூன்று நாட்களாக குற்றாலத்தில் சாரல் மழை பெய்யவில்லை. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. காற்றின் வேகமும் சற்று குறைந்துள்ளது. இருப்பினும் மலைப்பகுதியில் சாரல் மழை அவ்வப்போது பெய்வதால் அருவிகளில் தண்ணீர் சீராக விழுகிறது.

அந்த வகையில் இன்று விடுமுறை நாள் என்பதால் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்துக்கு வந்திருந்தனர். அவர்கள் அனைத்து அருவிகளிலும் ஆர்வாரத்துடன் குளித்து மகிழ்ந்தனர்.

மேலும், குற்றாலத்தில் இருந்து ஐந்தருவி செல்லும் சாலையில் உள்ள படகு குழாமில் படகு சவாரி ஏற்கனவே தொடங்கிவிட்டதால் சுற்றலா பயணிகள் படகு சவாரியிலும் ஆர்வம் காட்டினர்.

மேலும் செய்திகள்