நாமக்கல்
திருச்செங்கோடு நகராட்சி வளாகத்தில் கருணாநிதிக்கு சிலை
|திருச்செங்கோடு நகராட்சி வளாகத்தில் கருணாநிதிக்கு சிலை வைக்க ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியது.
எலச்சிபாளையம்:
திருச்செங்கோடு நகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. நகராட்சி தலைவர் நளினி சுரேஷ்பாபு தலைமை தாங்கினார். ஆணையாளர் கணேசன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் நகராட்சி வளாகத்தில் முன்னாள் முதல்- அமைச்சர் கருணாநிதி உருவ சிலை அமைக்க சிறப்பு தீர்மானத்தை நகராட்சி தலைவர் கொண்டு வந்தார். அந்த தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இதைதொடர்ந்து நகராட்சி உறுப்பினர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார்.
தொடர்ந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் கார்த்திகேயன், ராஜவேல், ராஜா, மைதிலி, அங்கமுத்து, மாரிமுத்து, விஜயபிரியா ஆகியோர் பேசுகையில், கருணாநிதி சிலை அமைக்க நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இதேபோன்று கடந்த காலங்களில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகள் அமைக்க ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.
இதற்கு பதில் அளித்து நகராட்சி தலைவர் பேசுகையில், அரசின் விதிகளுக்கு உட்பட்டு சிலைகள் அமைக்கப்படும். மேலும் குப்பை தொட்டி இல்லாத நகரமாக திருச்செங்கோடு நகரம் மாற்றப்படும் என்றார்.