ராமநாதபுரம்
திருவாடானையில் கண்மாயில் திருஞானசம்பந்தர் சிலை கண்டெடுப்பு
|திருவாடானையில் கண்மாயில் திருஞானசம்பந்தர் சிலை கண்டெடுக்கப்பட்டது.
தொண்டி,
திருவாடானையில் கண்மாயில் திருஞானசம்பந்தர் சிலை கண்டெடுக்கப்பட்டது.
திருஞானசம்பந்தர் சிலை
ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் உள்ள அத்தாணி கண்மாயில் நேற்று மாலை சிலர் குளிக்கச் சென்றனர். அப்போது அவர்கள் காலில் ஏதோ தட்டுப்பட்டுள்ளது. உடனே அதை எடுத்து பார்த்த போது சேதம் அடைந்த நிலையில் சிலை இருந்தது. இது குறித்து திருவாடானை முன்னாள் ஊராட்சி தலைவர் காளை வருவாய்த்துறை மற்றும் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவாடானை தாசில்தார் கார்த்திகேயன் அந்த சிலையை கைப்பற்றி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு சென்றார். அங்கு திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் குருக்கள் மூலம் சிலையை ஆய்வு செய்தார். அப்போது அந்த சிலையானது சுமார் 2 அரை அடி உயரம் கொண்ட ஐம்பொன் அல்லது உலோகத்தால் ஆன திருஞானசம்பந்தர் சிலை என்பது தெரியவந்தது.
வீசி சென்றது யார்?
மேலும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட தொல்லியல் துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் ராஜகுரு கூறியதாவது, திருவாடானையில் ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்குரிய சினேகவல்லி சமேத ஆதிரெத்தினேஸ்வரர் கோவில் உள்ளது. இக் கோவிலுக்கு திருஞானசம்பந்தர் வருகை தந்து சுவாமியை பற்றி பாடல் பாடியுள்ளார் என்ற வரலாறு உண்டு. அதனால் இந்த சிலை இந்த கோவிலுக்கு சம்பந்தப்பட்டதாக இருக்க வாய்ப்புள்ளது.
மேலும் இந்த சிலை ஐம்பொன் அல்லது செப்பு சிலையாக இருக்கலாம். இந்த சிலை 12 அல்லது 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்கால பாண்டியர் கால சிலையாக இருக்க வாய்ப்புள்ளது என்றார். மேலும் சிலையை தண்ணீரில் வீசி சென்றது யார்? மேலும் கண்மாய்க்குள் வேறு சிலைகள் இருக்க வாய்ப்பு உள்ளதா என்றும் பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அப்பகுதி மக்கள் சிலையை பார்க்க ஆர்வமுடன் குவிந்தனர்.