நாமக்கல்
ஜேடர்பாளையம் படுகை அணை பகுதியில்அல்லாள இளைய நாயகர் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சிவாரிசுகள் மரியாதை செலுத்த மறுக்கப்பட்டதால் பரபரப்பு
|பரமத்திவேலூர்:
ஜேடர்பாளையம் படுகை அணையில் அல்லாள இளைய நாயகருக்கு சிலையுடன் கூடிய குவிமாட மணிமண்டபம் அமைக்கப்பட்டு சிலை திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நாமக்கல்லில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அல்லாள இளைய நாயகர் சிலை திறப்பு விழாவிற்கான கல்வெட்டை திறந்து வைத்தார்.
இதனை தொடர்ந்து ஜேடர்பாளையம் படுகை அணை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள அல்லாள இளைய நாயகர் சிலைக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் ஊரக வளர்ச்சி துறை உதவி இயக்குனர் கலையரசு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். விழா குறித்து அல்லாள இளைய நாயகர் வாரிசுகள், பாசன வசதி பெறும் பொதுமக்கள் மற்றும் விவசாயிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனால் அவர்கள் இளைய நாயகர் சிலைக்கு மரியாதை செலுத்த அனுமதி மறுக்கப்பட்டதாக கருதி படுகை அணை பகுதியில் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து இடும்ப அல்லாள இளைய நாயகர் சோமசுந்தரம் தலைமையில் அங்கு கூடியிருந்தவர்களிடம் பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன், மாவட்ட நிர்வாகத்தினர் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் இளைய நாயகருக்கு வாரிசுகளின் சார்பிலும், பொதுமக்கள் சார்பிலும் மற்றும் பாசன வசதி பெரும் விவசாயிகளின் சார்பிலும் விழாவினை மற்றொரு நாளில் சிறப்பாக நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அங்கு கூடியிருந்த 100-க்கும் மேற்பட்டோர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.