சென்னை
இயேசு சிலுவையில் அறையப்பட்டதை நினைவுகூரும் விதமாக தேவாலயங்களில் சிலுவைப்பாதை பவனி
|இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நிகழ்வை நினைவுகூரும் வகையில் தேவாலயங்களில் சிலுவைப் பாதை பவனி, மும்மணிநேர தியான ஆராதனை நடந்தது.
ஈஸ்டர் பண்டிகைக்கு முன்னதாக கிறிஸ்தவர்களால் 40 நாட்கள் தவக்காலம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்த 40 நாட்களின் கடைசி வாரத்தின் பெரிய வியாழன் அன்று, இயேசு கிறிஸ்து தன் சீடர்களுடைய பாதங்களை கழுவும் நிகழ்வை நினைவுப்படுத்தும் விதமாக கத்தோலிக்க தேவாலயங்களில் நேற்று முன்தினம் பாதங்களை கழுவும் நிகழ்வு நடந்தது.
அதனைத்தொடர்ந்து புனித வெள்ளி அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில் இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்னதாக அவர் பட்டபாடுகளை எடுத்துக்கூறும் வகையில் சிலுவைப்பாதை பவனி நடைபெறும்.
அதன்படி, கிறிஸ்தவ தேவாலயங்களில் சிலுவைப்பாதை பவனி நேற்று நடந்தது. இதில் இயேசு சிலுவையில் அறையப்படும் போது அவருக்கு ஏற்பட்ட பாடுகள், அவருடைய மரணத்தை அப்படியே தத்ரூபமாக நடித்து காண்பிக்கும் நிகழ்வு நடக்கும்.
சென்னை பெசன்ட்நகர் புனித ஆரோக்கிய அன்னை திருத்தலத்தில் சிலுவைப் பாதை பவனி, சென்னை மயிலை உயர் மறைமாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி முன்னிலையில் நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
பெசன்ட் நகர் ஆலயத்தில் இருந்து கடற்கரையோர சாலையில் பவனியாக சென்று, இறுதியில் சிறப்பு திருப்பலியும் நடந்தது.
இதேபோல், சாந்தோம் தேவாலயம், எழும்பூர் திருஇருதய ஆண்டவர் ஆலயம் உள்பட பெரும்பாலான ஆலயங்களில் சிலுவைப் பாதை பவனியும், திருப்பலியும் நடைபெற்றது. சில ஆலயங்களில் இயேசு சிலுவையில் அறையப்பட்ட பின்னர், அவருடைய உடல் இருப்பது போன்ற சொரூபத்தையும் வைத்து இருந்தனர்.
மேலும் இயேசு கிறிஸ்து சிலுவைப் பாடுகளில் முன்மொழிந்த 7 வார்த்தைகள் குறித்த மும்மணி நேர தியான ஆராதனையும், சிறப்பு பிரார்த்தனையும் தேவாலயங்களில் நடந்தது.
இதையடுத்து இயேசு உயிர்த்தெழுந்த நாள், உயிர்ப்பு பெருவிழா மற்றும் ஈஸ்டர் பண்டிகையாக நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி தேவாலயங்களில் சிறப்பு ஆராதனையும், பிரார்த்தனையும் நடைபெறுகிறது.