< Back
மாநில செய்திகள்
ரெயில் மோதி யானைகள் இறப்பதை தடுக்க அதிநவீன செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் கண்காணிப்பு அமைப்பு

கோப்புப்படம் 

மாநில செய்திகள்

ரெயில் மோதி யானைகள் இறப்பதை தடுக்க அதிநவீன செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் கண்காணிப்பு அமைப்பு

தினத்தந்தி
|
9 Feb 2024 9:38 PM IST

விலங்குகளின் நடமாட்டத்தை, செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் மூலம் அறிய முடியும்.

சென்னை,

ரெயில் தண்டவாளங்களில் யானைகள் விபத்தில் இறப்பதைத் தடுக்க செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் உதவியுடன் கூடிய கண்காணிப்பு முறையை தமிழ்நாடு வனத்துறை இன்று அறிமுகப்படுத்தியது. கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரையில், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் சுப்ரியா சாகு, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சுப்ரத் மஹாபத்தர மற்றும் முதன்மை தலைமை வனப் பாதுகாவலர் மற்றும் தலைமை உயிரினக் காப்பாளர் சீனிவாஸ்.ரா.ரெட்டி ஆகியோர் முன்னிலையில் வனத்துறை அமைச்சர் மா.மதிவேந்தனால் இத்திட்டம் இன்று (09.02.2024) தொடங்கி வைக்கப்பட்டது.

கோவை வனக்கோட்டத்தில் சமீப காலமாக மனிதர்கள் யானை மோதல்கள் அதிகரித்து வருகின்றன. கோயம்புத்தூர் வனக்கோட்டத்தில் உள்ள யானைகள் நீலகிரி மற்றும் சத்தியமங்கலம் வனப்பகுதிகளிலிருந்து கோயம்புத்தூர் வனக்கோட்டம் வழியாக கேரள மாநில வனப்பகுதிகளின், தென் பகுதிக்கு இடம்பெயருகின்றன. வாளையார், போலம்பட்டி, ஆனைக்கட்டி காப்புக் காடுகள், கோபினாரி காப்புக் காடுகள், ஹுலிக்கல், ஜக்கனாரி சரிவுகள், நீலகிரி கிழக்கு சாய்வு காப்புக் காடுகள், சோலக்கரை, சிங்கபதி மற்றும் இருட்டுப்பள்ளம் போன்ற பகுதிகள் யானைகளின் ஓய்விடங்களாகும்.

அதிகரித்து வரும் யானைகளின் எண்ணிக்கை, இடம்பெயர்தல் அவற்றின் வழித்தடங்களில் ஏற்படும் இடையூறுகள், விலங்குகளின் வழித்தடப் பாதைகளின் வளர்ச்சி மற்றும் விவசாய நடைமுறைகளில் மாற்றங்கள் ஆகியவை யானைகளின் நடமாட்டத்தில் அதிக தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் இப்பகுதியில் மனித-யானை மோதல் அதிகரித்து வருவது தெரிய வருகிறது. கோவை வனக்கோட்டத்தில், 2021 முதல் 2023 வரையிலான கடந்த மூன்று ஆண்டுகளில் யானைகள் சுமார் 9,000 முறை வழிதவறி வந்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது. மதுக்கரை சரகத்தில் யானைகள் தண்டவாளத்தை கடக்கும்போது ஏற்படும் விபத்துகள் கோவை கோட்டத்தில் பெரும் சவாலாகவே இருந்து வருகிறது.

மதுக்கரை சரகத்தில் சோழக்கரை பீட் மற்றும் போலம்பட்டி பிளாக் 1 பாதுகாக்கப்பட்ட காடுகள் வழியாக இரண்டு ரெயில் பாதைகள் செல்கின்றன. கேரள வனப்பகுதியுடன் வாளையார் ஆற்றங்கரையில் எல்லையை பகிர்ந்து கொள்ளும் இந்த வனப்பகுதியில் யானைகளின் நடமாட்டம் அதிகம் காணப்படுகிறது. எதிர்பாராதவிதமாக, 2008 முதல் ரெயில்கள் மோதிய விபத்துகளில் இளம் கன்றுகள் மற்றும் இளம் யானைகள் உள்பட இதுவரை 11 யானைகள் இறந்துள்ளன. இரவு, பகல் மற்றும் அதிகாலையில் ரெயில்வே வன ஊழியர்கள் மற்றும் காவலர்களை ஈடுபடுத்தி முழுமையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டாலும், ரெயில்வே மற்றும் வனத்துறை இணைந்து சுரங்கப்பாதைகள் மற்றும் பிற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், இதுபோன்ற சம்பவங்கள் குறையவில்லை.

இதற்கு பயனுள்ள தீர்வு காண, வல்லுநர்களுடன் கலந்தாலோசித்து, செயற்கை நுண்ணறிவுடன் கூடிய தன்னாட்சி கண்காணிப்பு முறையில் 24 மணி நேரமும் யானைகளின் நடமாட்டத்தை கண்காணித்து யானை வழித்தடங்களில் அறிமுகப்படுத்தி விபத்துக்களை முற்றிலும் தவிர்க்க அரசு முடிவு செய்தது. கள ஆய்விற்குப் பிறகு, இத்திட்டத்தை செயல்படுத்துவதற்காக மிகவும் பாதிக்கப்படக்கூடிய 7 கி.மீ. நீளமுள்ள ரெயில் இருப்புப் பாதை கண்டறியப்பட்டு செயற்கை நுண்ணறிவு அமைப்பை நிறுவ அரசால் 7.24 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கண்காணிப்பு அமைப்பில், அனல் மற்றும் சாதாரண கேமராக்கள் பொருத்தப்பட்ட 12 உயரமான கோபுரங்கள், போலம்பட்டி வட்டம்-1 வனப்பகுதியில் முக்கிய இடங்களில் 500 மீ இடைவெளியில் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் யானைகள் கடக்கும் முக்கிய பகுதிகளை உள்ளடக்கி, ரெயில் பாதைகளின் இருபுறமும் 150 மீ தூரத்திற்கு முன்கூட்டியே விலங்குகளின் நடமாட்டத்தை, செயற்கை நுண்ணறிவு கேமராக்கள் மூலம் அறிய முடியும். உணரப்பட்ட சென்சார், தானாகவே வனத்துறையின் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றப்படுகிறது. இது களத்திலிருந்து சேகரிக்கப்பட்ட தரவுகளை நிகழ்நேர அடிப்படையில் செயலாக்குகிறது. வனத்துறையின் களப்பணியாளர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர், ஷிப்ட் முறையில் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிகின்றனர்.

விலங்குகளின் நடமாட்டத்தை கண்காணித்து, ரெயில் லோகோ பைலட்களுக்கு அழைப்புகள், குறுஞ்செய்தி மற்றும் எச்சரிக்கைகள் மூலம் தகவல்கள் உடனடியாக தெரிவிக்கின்றனர். இது தவிர, இரண்டு தடங்களிலும் ஏதேனும் விலங்கு இருந்தால் லோகோ பைலட்கள் முன்கூட்டியே பார்த்து செயல்பட டிஜிட்டல் டிஸ்ப்ளே எச்சரிக்கைகள், ரெயில் தடங்களில் வைக்கப்பட்டுள்ளன. செயற்கை நுண்ணறிவு மூலம் கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் விபத்துகளைத் தடுக்க வனத்துறையும், ரெயில்வே அதிகாரிகளும் இணைந்து செயல்படுகின்றனர். இந்த செயற்கை நுண்ணறிவு உருவாக்கப்பட்ட தரவுகள் விபத்துக்களை தடுப்பது மட்டுமின்றி, யானைகள் நடமாட்டம், யானைகளின் நடத்தை, தனிப்பட்ட யானைகளின் விவரக்குறிப்பு மற்றும் எதிர்கால முடிவுகளை எடுப்பதற்கு தேவையான தகவல்களை அளிக்கிறது.

மேலும் செய்திகள்