அரியலூர்
நூலகங்களின் நிலையும், இளைஞர்களின் வருகையும்
|ஒரு நூலகம் திறக்கப்படும் போது, ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது என்பார்கள். ஒரு இனத்தை அடிமையாக்க நினைப்பவர்கள், முதலில் அவர்களின் கைகளில் இருக்கும் புத்தகங்களை பறித்து எறிந்துவிடுவார்கள். இதைத்தான் ஆரம்ப காலத்தில் இருந்து ஆதிக்க சக்திகள் செய்து வந்தன.
நூலகங்கள்
கிராமங்கள் தோறும் பள்ளிக்கூடங்களைத் திறந்து கடைக்கோடியின் கைகளிலும் புத்தகங்களைக் கொடுத்து அந்த சதியினை முறியடித்தவர் பெருந்தலைவர் காமராஜர். அதன்பிறகே கல்வியிலும், வாழ்விலும் நாம் எழுச்சியைச் சந்தித்துக்கொண்டு வருகிறோம். புத்தகங்களின் அருமையையும், அதை அடைகாத்துவரும் நூலகங்களின் பெருமையையும் இதன் மூலம் உணர முடியும்.
நூலகங்களில் போய் புத்தகங்களை புரட்டி வாசிப்பது என்பது ஒருவகையான தவம் என்றே சொல்லலாம். அந்த பழக்கம் நம்மிடையே குறைந்து வருகிறதோ என்ற அச்சத்தை புதிய தொழில்நுட்பங்கள் அதிகரிக்கச் செய்கின்றன. அவைகளுக்கு ஈடுகொடுத்து நமது இளைஞர்களை நூலகங்கள் மீட்டு எடுக்குமா? நூலகங்களின் நிலை என்ன? இளைஞர்கள், இளம் பெண்களின் புத்தக வாசிப்பு எப்படி இருக்கிறது? என்பதை கீழே காண்போம்.
போதிய இடவசதி இல்லை...
தமிழக அரசின் பொது நூலகத்துறையின் கீழ் அரியலூர் பஸ் நிலையம் அருகே மாவட்ட மைய நூலகம் செயல்பட்டு வருகிறது.
இதேபோல் 21 கிளை நூலகங்களும், 19 ஊர்ப்புற நூலகங்களும், 24 பகுதி நேர நூலகங்கள் என மொத்தம் மாவட்டத்தில் 65 நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், மாவட்ட மைய நூலகம் உள்பட பெரும்பாலான நூலகங்களில் போதிய இடவசதி இல்லாததால் வாசகர்கள் மற்றும் போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மாவட்ட மைய நூலகம்
அரியலூர் நகரில் கடந்த 1955-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 9-ந் தேதி கிளை நூலகமாக வாடகை கட்டிடத்தில் தொடங்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 1985-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 7-ந் தேதி முதல் அரியலூர் பஸ் நிலையம் அருகே சொந்த கட்டிடத்தில் இயங்கி வருகிறது. மாவட்ட மைய நூலகமாக கடந்த 2010-ம் ஆண்டு ஜூலை மாதம் 6-ந் தேதி முதல் செயல்பட்டு வருகிறது.
இந்த நூலகத்தின் மொத்த பரப்பளவு 6,889 சதுர அடியாகும். இதில் சுமார் 16 ஆயிரம் பேர் உறுப்பினராக உள்ளனர். நாள் ஒன்றுக்கு 76 நூல்களை பொதுமக்கள் எடுத்து சென்று படிக்கின்றனர். சுமார் 100-க்கும் மேற்பட்ட போட்டி தேர்வாளர்கள் இங்கு அமர்ந்து படித்து வருகின்றனர்.
1,18,232 புத்தகங்கள்
பவள விழா ஆண்டை நோக்கி செல்லும் நூலகத்தில் 25-க்கும் மேற்பட்ட ஆங்கில நூல்கள் உள்பட 99 வகையான பருவ இதழ்கள் கிடைக்கின்றன. நூலகத்தில் இலக்கியம், வரலாறு, அறிவியல், புவியியல் உள்ளிட்ட சிறுவர்கள், பெரியவர்கள் மற்றும் போட்டி தேர்வாளர்கள் என அனைத்து தரப்புக்கும் தேவையான 1,18,232 புத்தகங்கள் இங்கு உள்ளன. மேலும் இக்கட்டிடமானது சிதிலமடைந்தும், காரைகள் பெயர்ந்தும், பாதுகாப்பற்ற சூழலில் அமைந்துள்ளது.
நூலகத்திற்கு அருகிலேயே பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கழிப்பிடமும், கால்வாயும் செல்வதால் நூலகத்தில் படிப்பவர்களுக்கு துர்நாற்றம் அடிக்கிறது. மேலும், போதிய இடவசதி இல்லாத காரணத்தினால் மாணவர்கள் வெளியே அமர்ந்து படிக்கின்றனர். தினசரி நாளிதழ்கள் மற்றும் வார இதழ் படிக்க வரும் பொது மக்களுக்கு இடப்பற்றாக்குறை ஏற்படுவதால் சில நேரங்களில் நூலக அதிகாரிகள் பிரச்சினைகளை எதிர் நோக்க வேண்டி உள்ளது. இதுகுறித்து நூலகத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் கூறியதாவது:-
போட்டி தேர்வு மூலம் வெற்றி
அழகு துரை:- அரியலூர் மைய நூலகத்தில் உள்ள புத்தகங்களை படித்து போட்டி தேர்வு மூலம் வெற்றி பெற்று சர்வேயராக பணிபுரிந்து வருகிறேன். இந்த நூலகமானது மாணவர்களுக்கு குறிப்பாக கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கு வாழ்க்கையில் ஒளியேற்றும் கலங்கரை விளக்கமாக திகழ்கிறது.
யு.பி.எஸ்.சி. தேர்வு புத்தகங்கள்
கனிமொழி:- தமிழ்நாடு அரசு தேர்வாணையம் நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு போதுமான புத்தகங்கள் கிடைக்கின்றன. ஆனால் யு.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கு போதுமான புத்தகங்கள் இல்லை. பிற்படுத்தப்பட்ட மாவட்டமான அரியலூரில் செயல்பட்டு வரும் மைய நூலகத்தில் யு.பி.எஸ்.சி. தேர்வுகளுக்கான புத்தகங்களை வாங்கி வைத்தால் என்னை போன்ற போட்டித் தேர்வுகளுக்கு படிக்கும் இளைஞர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இருக்கை ஆக்கிரமிப்பு
மறவனூரை சேர்ந்த தர்மலிங்கம்:- அரியலூர் நூலகத்தில் கடந்த 25 ஆண்டுகளாக தினசரி நாளிதழ்களை வாசித்து வருகிறேன். தற்போது போட்டி தேர்வுக்கு படிக்கும் மாணவர்கள் இருக்கையை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் தினசரி நாளிதழ்கள், வார இதழ்களை வாசிக்க முடியவில்லை.
கூடுதல் கழிப்பறை
போட்டி தேர்வுக்கு படித்து வரும் மாணவி சௌமியா:- டி.என்.பி.எஸ்.சி. உதவி பொறியாளர் பதவிக்கு படித்து வருகிறேன். இதற்கான புத்தகங்கள் அனைத்தும் நூலகத்தில் உள்ளன. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வரும் சூழலில் ஒரே ஒரு கழிப்பறை வசதி மட்டுமே உள்ளதால் சில நேரங்களில் அசவுகரியம் ஏற்படுகின்றன. எனவே கூடுதல் கழிப்பறை வசதிகளை ஏற்படுத்த வேண்டும்.
நூல் நிலையங்களை பராமரிக்கும் பணி
தா.பழூர் இடங்கண்ணி கிராமத்தை சேர்ந்த ஜெகன்:- கிராமப்புறத்தில் உள்ள மாணவ-மாணவிகள், பட்டதாரி இளைஞர்கள், வேலை வாய்ப்பு தேடும் இளைஞர்கள் உள்ளிட்டவர்களுக்கு கிராமப்புற நூல் நிலையங்கள் மிகவும் இன்றியமையாதது ஆகும். ஆனால் தா.பழூர் ஒன்றியத்தில் உள்ள பெரும்பாலான நூலகங்கள் திறக்கப்படுவதே இல்லை. சில நூலகங்கள் மட்டும் காலை நேரத்தில் திறந்து வைக்கப்படுகிறது. வேலை தேடும் இளைஞர்களுக்கும் டி.என்.பி.எஸ்.சி. போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கு தயாராகும் பட்டதாரி இளைஞர்களுக்கும் நூல் நிலையங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே நூலகங்கள் காலையில் திறக்கப்படுகிறதோ? இல்லையோ மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை அனைத்து கிராமங்களிலும் திறக்கப்படுவதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். அதுபோல் தமிழக அரசு நேரடியாக அனைத்து கிராமங்களுக்கும் நூலகர்களுக்கான பட்டய படிப்பு அல்லது பட்டப்படிப்பு படித்த இளைஞர்களுக்கு நூல் நிலையங்களை பராமரிக்கும் பணியை வழங்க வேண்டும். இதுவே நூல் நிலையங்கள் தொடர்ந்து திறந்து வைக்கப்படுவதற்கான ஒரே வாய்ப்பு.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
நூலகத்தை விரிவாக்கம் செய்ய கோரிக்கை
அரியலூர் மாவட்ட மைய நூலகத்திற்கு தேவையான அடிப்படி வசதிகள் குறித்து மைய நூலகர் ஹான்பாஷா கூறியதாவது:-
பவள விழா ஆண்டை நோக்கி செல்லும் அரியலூர் மாவட்ட மைய நூலகத்திற்கு நாள்தோறும் ஏராளமானோர் வந்து செல்கிறார்கள். குறிப்பாக போட்டி தேர்வுகள் குறித்த அறிவிப்பு வெளிவருகையில் ஏராளமான மாணவர்கள் இங்கு அமர்ந்து படிப்பதால் போதிய இடவசதி இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு அரசும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி நூலகத்தை விரிவாக்கம் செய்ய வேண்டும். இல்லையெனில் நகரில் பழைய யூனியன் அலுவலகத்தில் காலியாக உள்ள இடத்திலோ, பல்துறை வளாகத்தில் புதிய நூலக கட்டிடம் அமைத்துக் கொடுத்தால் அரியலூரை போன்ற பிற்படுத்தப்பட்ட, மிகவும் பின்தங்கிய பகுதியிலிருந்து ஏராளமான மாணவர்கள் அரசு தேர்வுகளில் வெற்றி பெற முடியும். இதுவரை அரியலூர் மைய நூலகத்தில் பயின்ற 100-க்கும் மேற்பட்டோர் அரசு பணியில் சேர்ந்து உள்ளது குறிப்பிடத்தக்கது. நூலகத்திற்கான இடம் ஊருக்கு உள்ளே இருந்தால் மட்டுமே அனைத்து மாணவ-மாணவிகளும் பயில்வதற்கு ஏதுவாக இருக்கும் என்றார்.
தா.பழூர் ஒன்றியத்தில் பூட்டி கிடக்கும் நூலகங்கள்
அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 33 ஊராட்சிகளிலும் ஊராட்சி மன்ற நிர்வாகத்தின் கீழ் நூல் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் பெரும்பாலான நூலகங்கள் எப்பொழுதும் பூட்டியே கிடக்கின்றன. நூலகங்களை நிர்வகிப்பதற்கு சரியான ஆட்கள் கிடைப்பதில்லை. சில ஊராட்சிகளில் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் அல்லது ராணுவ வீரர்களை காலை 10 மணி முதல் மதியம் 12 மணி வரை நூலகங்களை திறந்து வைக்க ஏற்பாடு செய்துள்ளனர். அவ்வாறு திறந்து வைக்கப்படும் நூலகங்களில் பணியாற்றும் இவர்களுக்கு சரியான ஊதியமும் பல ஆண்டுகளாக வழங்கப்படாமல் நிலுவையில் உள்ளது என கூறப்படுகிறது. நூலகர்களுக்கு சரியான ஊதியம் வழங்கப்படாமல் சேவை அடிப்படையில் அவர்கள் அந்த பணியை செய்து வருகின்றனர்.