அரியலூர்
மாநில அளவிலான வினாடி-வினா போட்டி
|மான்போர்ட் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் மாநில அளவிலான வினாடி-வினா போட்டி நடைபெற்றது.
அரியலூர் மான்போர்ட் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி சார்பாக மாநில அளவிலான வினாடி-வினா போட்டி நடைபெற்றது. இதில், மாநிலம் முழுவதும் உள்ள 245 பள்ளிகளிலிருந்து 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டி ஜூனியர், சீனியர் மற்றும் சூப்பர் சீனியர் என 3 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு மாவட்டம், மண்டலம் மற்றும் மாநில அளவில் நடைபெற்றது. இதில் 11 பள்ளிகளின் குழுவைச்சேர்ந்த 66 மாணவ-மாணவிகள் இறுதி போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டன. பின்னர் இறுதி போட்டி மான்போர்ட் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் 2 நாட்கள் நடைபெற்றது.
இதில் 6 பள்ளி குழுவைச்சேர்ந்த 36 பேர் வெளியேற்றப்பட்டனர். இதனைதொடர்ந்து நடைபெற்ற போட்டியில் 5 பள்ளி குழுவைச்சேர்ந்தவர்களிடம் போட்டி நடத்தப்பட்டு முதலிடம் பெற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அதன்படி, ஜூனியர் பிரிவில் ஏற்காடு மான்போர்ட் பள்ளியும், சீனியர் பிரிவில் திருச்சி காட்டூர் மான்போர்ட் பள்ளியும், சூப்பர் சீனியர் பிரிவில் விருதுநகர் சுந்தரம் மெட்ரிக்குலேஷன் பள்ளியும் முதலிடம் பெற்றனர். பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவிற்கு மான்போர்ட் பள்ளியின் முதல்வர் அந்தோணிசாமி செழியன் தலைமை தாங்கினார். இதில் இசையமைப்பாளரும், இயக்குனருமான ஜேம்ஸ் வசந்தன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசு மற்றும் பதக்கங்களை வழங்கி மாணவர்கள் தங்களது வாழ்வில் எவ்வாறு வெற்றி பெறுவது என்பது குறித்து உரையாற்றினார். இந்தநிகழ்ச்சியில் ஏற்காடு மான்போர்ட் ஐ.சி.எஸ்.சி. பள்ளியின் முதல்வர் ஜார்ஜ், மாணவ-மாணவிகள், பெற்றோர்கள், ஆசிரியர்கள், பள்ளி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.