அரியலூர்
மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் தொடக்கம்
|பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாநில அளவிலான விளையாட்டு போட்டிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதில் 2,660 மாணவ-மாணவிகள் பங்கேற்றுள்ளனர்.
விளையாட்டு போட்டிகள்
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவ-மாணவிகளின் நலனுக்காக பள்ளிக்கல்வித்துறை சார்பில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். தொடர்ந்து, பள்ளி மாணவ-மாணவிகளின் விளையாட்டு திறனை மேம்படுத்தும் வகையில் மாநில அளவிலான பல்வேறு விளையாட்டு போட்டிகள் நடத்த உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம், கீழப்பழுவூர் சுவாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் மாநில அளவிலான குடியரசு தினம் மற்றும் பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, விநாயக மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் கேரம் போட்டியினை தொடங்கி வைத்தார்.
2,660 மாணவ-மாணவிகள் வருகை
அரியலூர் மாவட்டத்தில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் மாநில அளவிலான சிலம்பம், சாலையோர சைக்கிள் மற்றும் கேரம் விளையாட்டுப்போட்டிகள் நேற்று முதல் 22-ந் தேதி வரை 4 நாட்கள் மேற்கண்ட பள்ளிகளில் நடைபெறுகின்றது. இப்போட்டிகளில் கலந்துகொள்ள தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்களிலிருந்தும் 2,660 மாணவ-மாணவிகள் வருகை புரிந்துள்ளனர்.
மேலும், இப்போட்டிகள் நேற்று மற்றும் இன்று (வெள்ளிக்கிழமை) ஆகிய இரு நாட்களும் மாணவிகளுக்கான சிலம்பம், சாலையோர சைக்கிள் மற்றும் கேரம் விளையாட்டுப்போட்டிகளும், 21, 22-ந் தேதிகளில் மாணவர்களுக்கான சிலம்பம், சாலையோர சைக்கிள் மற்றும் கேரம் விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறுகின்றது. இப்போட்டிகளில் பங்குபெற வருகை புரிந்துள்ள மாணவ- மாணவிகள் மற்றும் அணி மேலாளர்களுக்கும் தனித்தனியே தங்குவதற்கு இடம் மற்றும் உணவு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. போட்டிகள் 14, 17, 19-வயதுக்கு கீழ் உள்ள மாணவ- மாணவிகளுக்கு தனித்தனியே நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன், பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குனர் அனிதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் விஜயலட்சுமி, ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சுமதி அசோகசக்கரவர்த்தி, ஊராட்சி மன்றத்தலைவர் தனலெட்சுமி மருதமுத்து, சுவாமி பள்ளி தாளாளர் கோவிந்தசாமி, மாவட்ட கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.