< Back
மாநில செய்திகள்
பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கட்டுரைப் போட்டி -  கவர்னர்  ஆர்.என்.ரவி
மாநில செய்திகள்

பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கட்டுரைப் போட்டி - கவர்னர் ஆர்.என்.ரவி

தினத்தந்தி
|
16 July 2022 12:47 PM GMT

75-ஆவது ஆண்டு சுதந்திர தின நிறைவையொட்டி, பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவில் கட்டுரைப் போட்டி நடைபெற உள்ளது.

சென்னை,

இந்திய நாட்டின் 75-ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தின் நிறைவையொட்டி, தமிழகத்தில் பயிலும் பள்ளி-கல்லூரி மாணவர்களுக்கான மாநில அளவிலான கட்டுரைப் போட்டியை தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் நடத்த கவர்னர் ஆர்.என்.ரவி விருப்பம் தெரிவித்துள்ளார். (6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான) மாணவ/மாணவிகள் பள்ளி அளவிலும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் படிப்பவர்களும் கட்டுரைப் போட்டிகளில் பங்கேற்கலாம். தமிழ், ஆங்கிலம் என இரு மொழிகளில் போட்டி நடத்தப்படும்.

பள்ளி மாணவ, மாணவிகள், 'நான் விரும்பும் சுதந்திரப் போராட்ட வீரர்' என்ற தலைப்பில் தமிழிலும், ஆங்கிலத்திலும் கட்டுரை எழுத வேண்டும். 10 பக்கங்களுக்கு மிகாமல் ஒரு தாளில் 20 வரிகளுடன் கட்டுரை அமைய வேண்டும். '2047-ல் இந்தியா' என்ற தலைப்பில் கல்லூரி, பல்கலைக்கழக மாணவ-மாணவிகள் கட்டுரை எழுத வேண்டும். இந்த கட்டுரைகள் அனைத்தும் வருகிற ஆகஸ்ட் 1-ந்தேதி மாலை 6 மணிக்குள்ளாக அனுப்ப வேண்டும்.

கட்டுரைகளை அனுப்பும் போது, பெயர், வீட்டு முகவரி, வகுப்பு அல்லது பாடப் பிரிவு போன்ற விவரங்களைத் தெரிவிக்க வேண்டும். படிக்கும் கல்வி நிறுவனத்தின் முகவரி, செல்போன் எண் ஆகியவற்றையும் குறிப்பிட வேண்டும்.

கல்லூரி அளவில் முதல் 3 இடங்களைப் பெறும் மாணவ –மாணவிகளுக்கு முறையே ரூ.1 லட்சம், ரூ.75 ஆயிரம் மற்றும் ரூ.50 ஆயிரம் ரொக்கப் பரிசுகள் அளிக்கப்படும்.பள்ளி அளவில் நடைபெறும் போட்டியில், முதல் 3 இடங்களைப் பெறும் மாணவ-மாணவிகளுக்கு முறையே ரூ,75 ஆயிரம், ரூ.50 ஆயிரம் மற்றும் ரூ.25 ஆயிரம் அளிக்கப்படும். கிண்டியிலுள்ள கவர்னர் மாளிகையில் நடைபெறும் சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது பரிசுத் தொகைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரிகள்: தமிழ் கட்டுரைகள் இயக்குநர், செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனம், செம்மொழிச்சாலை, பெரும்பாக்கம், சென்னை-100 என்ற முகவரிக்கும், ஆங்கிலத்திலான கட்டுரைகள் துணைவேந்தர், தமிழ்நாடு டாக்டர் எம்,ஜி.ஆர்., மருத்துவப் பல்கலைக்கழகம், 69, அண்ணாசாலை, கிண்டி, சென்னை-32 என்ற முகவரிக்கும் அனுப்ப வேண்டும்.

மேற்கண்ட தகவல்கள் கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்