பெரம்பலூர்
மாநில அளவிலான கணினி திறனறி தேர்வு: முதலிடம் பிடித்து அசத்திய அரசு பள்ளி மாணவ-மாணவிகள்
|மாநில அளவிலான கணினி திறனறி தேர்வில் முதலிடம் பிடித்து அரசு பள்ளி மாணவ-மாணவிகள் அசத்தினர்.
குன்னம்:
ஒரே அரசு பள்ளி
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக தொழில் முனைவோர் மற்றும் திறன் வளர்ப்பு பயிற்சி மையம் சார்பில் தமிழக அளவில் 600 பள்ளிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு ஓராண்டு கணினி பயிற்சி அளிக்கப்பட்டது. இந்த 600 பள்ளிகளில் 599 பள்ளிகள் தனியார் சி.பி.எஸ்.இ. பள்ளிகளாகும். மீதம் உள்ள ஒரு பள்ளி பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே கொத்தவாசலில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியாகும்.
இந்நிலையில் தமிழக அளவில் 600 பள்ளிகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்ற 4 கணினி பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் கொத்தவாசல் நடுநிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் முதலிடத்தில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
முதலிடம் பிடித்தனர்
இதில் இப்பள்ளியை சேர்ந்த 5-ம் வகுப்பு மாணவி துவாரகா கம்ப்யூட்டிங் ஸ்கில் பாடத்தில் 300-க்கு 295 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், 6-ம் வகுப்பு மாணவி வசுமதி ஆபீஸ் ஆட்டோமேசன் பாடத்தில் 300-க்கு 290 மதிப்பெண்களை பெற்று முதலிடத்தையும், 7-ம் வகுப்பு மாணவி ரம்யா கிராபிக் டிசைன் பாடத்தில் 300-க்கு 287 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும், 8-ம் வகுப்பு மாணவர் விஷால் வெப் டிசைன் பாடத்தில் 300-க்கு 299 மதிப்பெண்கள் பெற்று முதலிடத்தையும் பிடித்துள்ளனர்.
இப்பள்ளி மாணவ, மாணவிகளின் சாதனையால் இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை 2 மடங்காக உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.