< Back
மாநில செய்திகள்
தூய்மை பணியாளர்களுக்கு மாநில அளவிலான ஆணையம்
கோயம்புத்தூர்
மாநில செய்திகள்

தூய்மை பணியாளர்களுக்கு மாநில அளவிலான ஆணையம்

தினத்தந்தி
|
27 Oct 2023 1:00 AM IST

தூய்மை பணியாளர்களுக்கு மாநில அளவில் ஆணையம் அமைக்க வேண்டும் என்று தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் வலியுறுத்தினார்.


தூய்மை பணியாளர்களுக்கு மாநில அளவில் ஆணையம் அமைக்க வேண்டும் என்று தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் வலியுறுத்தினார்.


ஆய்வுக்கூட்டம்


தூய்மை பணியாளர்களுக்கான நல வாரிய பணிகள் மற்றும் மறுவாழ்வு பணிகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கூட்டரங்கில் நடந்தது. கலெக்டர் கிராந்திகுமார் தலைமை தாங்கினார்.


மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் கலந்து கொண்டு பேசினார். இதில் அனைத்துத்துறை அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


பின்னர் தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய தலைவர் வெங்கடேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-


தினக்கூலி ரூ.715


கோவை மாநகராட்சியில் பணியாற்றி வரும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் கடந்த 6 நாட்களாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்பள பிரச்சினையில் சில குழப்பங்கள் உள்ளன. குறைந்தபட்ச ஊதியம் கொடுக்க வேண்டும் என்று அரசு தெரிவித்து இருக்கும் நிலையில், மற்றொரு அரசாணையில் மாவட்ட கலெக்டர், ஊதியத்தை நிர்ணயம் செய்யலாம் என்றும் கூறப்பட்டு இருக்கிறது.


இதில் எந்த ஊதியம் குறைவாக இருக்கிறதோ அதை கொடுக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருப்பதால் அதிகாரிகள் குழம்பி விட்டனர். இதற்கு முன்பு இருந்த கலெக்டர் தினக்கூலியாக ரூ.715 கொடுக்க வேண்டும் என்று அறிவித்து இருப்பதாக கூறப்பட்டது. அதை ஆய்வு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


பதவி நீக்கம்


அதே நேரத்தில் மாநகராட்சியில் தினக்கூலியாக ரூ.648 என்று தீர்மானம் உள்ளனர். ஆனால் அந்த ஊதியம் கடந்த மாதம் வரை கொடுக்கப்படவில்லை என்று ஊழியர்கள் புகார் தெரிவித்து உள்ளனர். எனவே குழப்பமாக இருக்கும் அரசாணையை தமிழக அரசு திரும்ப பெற்று, எந்த ஊதியம் அதிகமாக இருக்கிறதோ அதை தூய்மை பணியாளர்களுக்கு வழங்க வேண்டும்.


மேலும் கோவை அரசு ஆஸ்பத்திரியில் தூய்மை பணியாளர்களுக்கு பாலியல் தொல்லை கொடுப்பதாக மேலாளர் மீது எழுந்த குற்றச்சாட்டு குறித்து ஆஸ்பத்திரி டீனிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரை நீக்கம் செய்ய வேண்டும் என்று கலெக்டரிடம் அறிவுறுத்தி உள்ளேன்.


மாநில அளவிலான ஆணையம்


தூய்மை பணியாளர்கள் தொடர்பாக ஒப்பந்த அடிப்படை இருப்பதை ஒழிக்க வேண்டும். அதற்கு பதிலாக கர்நாடகாவில் பின்பற்றப்படும் மாவட்ட பேமென்ட் சிஸ்டம் என்ற முறையை பின்பற்ற வேண்டும். மேலும் தூய்மை பணியாளர்களுக்கு தேசிய அளவில் ஆணையம் இருப்பதுபோன்று மாநில அளவில் ஆணையத்தை உருவாக்க வேண்டும். பணியாளர்கள் பாதுகாப்பு உபகரணங்கள் அணிந்துதான் வேலை செய்ய வேண்டும்.


இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்