விருதுநகர்
இளம்பெண்ணை பட்டினி போட்டு சித்ரவதை
|இளம்பெண்ணை பட்டினி போட்டு சித்ரவதை செய்தவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
விருதுநகர் அருகே உள்ள இ.குமாரலிங்காபுரத்தை சேர்ந்தவர் கிருத்திகா. இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம் கீழக்கரந்தையை சேர்ந்த மாரிக்கண்ணன் என்பவருக்கும் கடந்த 2017-ம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்தின் போது 50 பவுன் நகையும், மாரிக்கண்ணனுக்கு 4 பவுன் செயினும், வைர மோதிரமும், திருமண செலவிற்கு ரூ.5 லட்சமும் வரதட்சணையாக கொடுக்கப்பட்டது. திருமணத்திற்கு பின்பு கிருத்திகா, கணவருடன் சென்னையில் வசித்து வந்தார். மாரிக்கண்ணன் அங்கு டீக்கடை நடத்தி வருகிறார். தினசரி மது குடித்துவிட்டு வந்து கிருத்திகாவை மாரிக்கண்ணன் அடித்து கொடுமைப்படுத்தியதுடன் உணவு கொடுக்காமல் பட்டினி போட்டு சித்ரவதை செய்ததாகவும் கூறப்படுகிறது. இதனிடையே கிருத்திகாவின் நகைகளில் பாதி நகையை தனது சகோதரி கோகிலாவிடம் கொடுத்ததோடு மீதமுள்ள நகையை தன்னிடம் வைத்துக் கொண்டார். மேலும் மாரிக்கண்ணனின் தாயார் பொன்னுத்தாய், சகோதரி கோகிலா ஆகியோரின் தூண்டுதலின் பேரில் மாரிக்கண்ணன் தினசரி கிருத்திகாவை அடித்து கொடுமைப்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
கடந்த செப்டம்பர் 2022-ல் திருமணத்திற்காக ஊருக்கு வந்த நிலையில் ஊர்விலக்கிலேயே கிருத்திகாவை இறக்கி விட்டு சென்ற மாரிக்கண்ணன் பின்பு அவரை குடும்பம் நடத்த அழைக்காத நிலையில் செல்போனில் தொடர்பு கொள்ளவும் இல்லை. இதனைதொடர்ந்து கிருத்திகாவின் தந்தை மாரிக்கண்ணனை தொடர்பு கொண்டு கேட்டபோது கிருத்திகாவுடன் சேர்ந்து வாழ முடியாது என மாரிக்கண்ணன் தெரிவித்துள்ளார். இந்தநிலையில் மாரிக்கண்ணனுடன் சேர்ந்து வாழ்ந்தால் அவரது தாயார் மற்றும் சகோதரி உடன் சேர்ந்து கொடுமைப்படுத்துவார் என்று பயந்த கிருத்திகா தனது நகைகளைமீட்டு தர உத்தரவிடக்கோரி விருதுநகர் மாஜிஸ்திரேட் கோட்டில் வழக்கு தொடர்ந்தார். கோர்ட்டு உத்தரவுப்படி மாரிக்கண்ணன், பொன்னுத்தாய், கோகிலா ஆகிய 3 பேர் மீது விருதுநகர் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.