கன்னியாகுமரி
அக்டோபர் 10-ந் தேதி முதல் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலை டவுன் நிலையம் வழியாக இயக்க அனுமதி
|அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலை டவுன் ரெயில் நிலையம் வழியாக அக்டோபர் 10-ந் தேதி முதல் இயக்க ரெயில்வேத்துறை அனுமதி அளித்துள்ளது. அதற்காக கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
நாகர்கோவில்:
அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலை டவுன் ரெயில் நிலையம் வழியாக அக்டோபர் 10-ந் தேதி முதல் இயக்க ரெயில்வேத்துறை அனுமதி அளித்துள்ளது. அதற்காக கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
அனந்தபுரி எக்ஸ்பிரஸ்
கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து திருவனந்தபுரம், குழித்துறை, நாகர்கோவில், நெல்லை வழியாக சென்னை எழும்பூருக்கு அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இதே போல் மறுமார்க்கத்தில் சென்னை எழும்பூரில் இருந்து கொல்லத்துக்கு இயக்கப்பட்டு வருகிறது.
இந்த ரெயிலானது நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் வந்து என்ஜின் மாற்றம் செய்யப்பட்ட பிறகு புறப்பட்டு செல்லும். இதனால் சுமார் 40 நிமிடங்களில் இருந்து 50 நிமிடங்கள் வரை தாமதமாகி வந்தது. எனவே நேரம் வீணாவதை தவிர்க்க அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலை நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையம் வராமல் நாகர்கோவில் டவுன் ரெயில் நிலையத்தில் நின்று செல்ல ரெயில்வே வாரியம் ஒப்புதல் அளித்தது.
இந்தநிலையில் அக்டோபர் மாதம் 20-ந் தேதி முதல் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயிலை டவுன் ரெயில் நிலையம் வழியாக இயக்க திருவனந்தபுரம் கோட்டம் அனுமதி அளித்துள்ளது. ரெயில் வழக்கமான நேரத்திலேயே டவுன் ரெயில் நிலையத்துக்கு வரும் வகையில் அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது.
கால அட்டவணை
அதாவது அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னையில் இருந்து வழக்கமாக காலை 9 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வரும். தற்போது திருவனந்தபுரம் கோட்டம் வெளியிட்டுள்ள கால அட்டவணையில் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் காலை 8.47 மணிக்கு டவுன் ரெயில் நிலையம் வந்து 8.50 மணிக்கு புறப்படும் என்று கூறப்பட்டு உள்ளது. இதே போல மறுமார்க்கமாக மாலை 6.10 மணிக்கு டவுன் ரெயில் நிலையம் வந்து 6.13 மணிக்கு புறப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அனந்தபுரி ரெயிலை டவுன் ரெயில் நிலையம் வழியாக இயக்க பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை திருவனந்தபுரம் கோட்டம் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினசரி ரெயில்களாக...
இதுபற்றி குமரி மாவட்ட ரெயில் பயணிகள் சங்க தலைவர் ஸ்ரீராம் கூறுகையில், அனந்தபுரி ரெயில் டவுன் வழியாக செல்லும் போது நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலைய பயணிகளுக்கு ஏற்படும் இழப்பை சரிக்கட்ட வேண்டும். எனவே நாகர்கோவில்- தாம்பரம், நாகர்கோவில்- சென்னை சென்டிரல் ஆகிய வாராந்திர ரெயில்களை தினசரி ரெயில்களாக இயக்க வேண்டும். அனந்தபுரி ரெயிலில் உள்ள முன்பதிவு கோட்டாவை மாற்றம் செய்து நாகர்கோவில் டவுன் நிலையத்தையும் பொது கோட்டாவில் இணைக்க வேண்டும் என்றார்.