< Back
மாநில செய்திகள்
தூய்மை பணிகள் தொடக்கம்
திருச்சி
மாநில செய்திகள்

தூய்மை பணிகள் தொடக்கம்

தினத்தந்தி
|
4 Jun 2022 12:15 AM IST

திருச்சி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தூய்மை பணி தொடங்கப்பட்டது.

திருச்சி, ஜூன்.4-

மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தூய்மை பணி தொடங்கப்பட்டது.

தூய்மை பணி

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தினை நேற்று சென்னையில் தொடங்கி வைத்தார். இதைதொடர்ந்து நேற்று திருச்சி மத்திய பஸ் நிலையத்தில் தூய்மை பணி மாவட்ட தலைவர் சிவராசு தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது. மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இந்த தூய்மை பணி மத்திய பஸ் நிலையம் முதல் ரெயில்வே ஜங்ஷன் ரவுண்டானா வரையிலும். சத்திரம் பஸ் நிலையம் முதல் தெப்பக்குளம் வரையிலும், டி.வி.எஸ். டோல் கேட் முதல் ஆவின் அலுவலகம் வரையிலும், அரியமங்கலத்ததில் தீப்பெட்டி தெரு மலையடிவார பகுதியிலும், தில்லைநகர் 1-வது குறுக்க தெரு முதல் 11-வது குறுக்கு தெரு வரையிலும் நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த தூய்மை பணியில் ஈடுபட்டனர். இதேபோல் மாவட்டத்தில் 5 நகராட்சிகள், 14 பேரூராட்சிகளிலும் இந்த தூய்மைப் பணி நடைபெற்றது. மேலும் குப்பையில்லா நகரங்களை உருவாக்கும் வகையிலும், "எனது குப்பை- எனது பொறுப்பு" என்பதை அனைவரும் பின்பற்றிடும் வகையிலும் மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

சுற்றுலா தலங்கள்

இந்த தூய்மை பணி முகாம்கள் ஒவ்வொரு மாதமும் 2-வது மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் மக்கள் அதிகம் கூடும் இடங்களான முக்கிய சுற்றுலா தலங்கள் பிரசித்தி பெற்ற கோவில்கள், உழவர் சந்தைகள், பஸ் நிலையங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட பகுதிகளில் நடத்தப்படுகிறது.

லால்குடி நகராட்சி

லால்குடி நகராட்சியில் தூய்மை பணியை நகராட்சித் தலைவர் துரைமாணிக்கம் தலைமையில் தொடங்கி வைக்கப்பட்டது. இதையொட்டி நடந்த ஊர்வலத்தில் நகராட்சி ஆணையர் குமார், ஆங்கரை ஊராட்சி மன்ற தலைவர் சண்முகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ஊர்வலம் அகிலாண்டேஸ்வரி நகர், பரமசிவபுரம், லால்குடி ெரயில்வே மேம்பாலம் வழியாக சென்றது.

மண்ணச்சநல்லூர்

மண்ணச்சநல்லூரில் பேரூராட்சி தலைவர் சிவசண்முககுமார், செயல் அலுவலர் கணேசன் முன்னிலையில் தூய்மை பணி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பேரூராட்சி பணியாளர்கள், அலுவலக ஊழியர்கள், தூய்மை காவலர்கள் உள்ளிட்டோர் மண்ணச்சநல்லூர் சிவன் கோவிலில் இருந்து கடைவீதி, எதுமலை பிரிவு சாலை வழியாக பேரூராட்சி அலுவலகம் வரை ஊர்வலமாக சென்று விழிப்புணர்வு ஏற்படு்த்தினர்.

காட்டுப்புத்தூர்

காட்டுப்புத்தூர் பேரூராட்சி 4-வது வார்டு என்.ஜி. நகர் பூங்காவில் நடந்த தூய்மை பணியை பேரூராட்சி தலைவர் சங்கீதா சுரேஷ் தொடங்கி வைத்தார். துணை தலைவர் சுதா சிவசெல்வராஜ், பேரூராட்சி செயல் அலுவலர், சு.உமாராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் கவுன்சிலர்கள், பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மணப்பாறை

மணப்பாறையில் நகராட்சி சார்பில் தூய்மைக்கான மக்கள் இயக்கத்தை வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. இதில் தூய்மை பணியாளர்கள் நகர்மன்றத் தலைவர், உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் பேரணியில் பங்கேற்றனர். பேரணியானது பேருந்து நிலையம் வழியாகச் சென்று ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே முடிவடைந்தது.

பூவாளூர் பேரூராட்சி

லால்குடியை அடுத்த பூவாளூர் பேரூராட்சியில் தூய்மை நகரத்தின் மக்கள் இயக்கம் செயல்பாடுகள் குறித்து தூய்மை உறுதிமொழி பேரூராட்சி தலைவர் புவனேஸ்வரி பால்ராஜ் எடுக்கப்பட்டது. இதில் துணை தலைவர் கோமதி முருகேசன், வார்டு உறுப்பினர்கள், செயல் அலுவலர் சாந்தி மற்றும், பேரூராட்சி அலுவலக பணியாளர்கள், தூய்மை பணியாளர்கள், டெங்கு பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்