திருச்சி
ஓடும் பஸ்சின் படிக்கட்டில் நின்று, லாரியை பிடித்தவாறு மாணவர்கள் ஆபத்தான பயணம்
|ஓடும் பஸ்சின் படிக்கட்டில் நின்று, லாரியை பிடித்தவாறு மாணவர்கள் ஆபத்தான பயணம் செய்தனர்.
துறையூர்:
பள்ளி மாணவர்கள்
துறையூர் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பள்ளிகள் செயல்படுகின்றன. இந்த பள்ளிகளுக்கு தினமும் ஏராளமான மாணவர்கள் துறையூர் பஸ் நிலையத்தில் இருந்து பஸ் மூலம் சென்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று மாலை பள்ளி முடிந்து மீண்டும் வீடு திரும்புவதற்காக துறையூர் மற்றும் சுற்றுப்புற பகுதியில் இருந்து மாணவர்கள் துறையூரில் உள்ள பஸ் நிலையத்திற்கு வந்தனர்.
இதில் துறையூரில் இருந்து ஓமந்தூர் சென்ற அரசு பஸ்சில் ஏறிய மாணவர்களில் வழக்கம்போல் பஸ்சின் பின்பக்கத்தில் உள்ள படிக்கட்டுகளில் 5 மாணவர்கள் நின்று கொண்டு பயணம் செய்தார்கள். வழியில் துறையூர்-பெரம்பலூர் சாலையில் அந்த பஸ்சையொட்டி, ஒரு லாரி சென்றது.
அதிர்ஷ்டவசமாக தப்பினர்
அப்போது பஸ்சின் படிக்கட்டில் நின்று பயணம் செய்த மாணவர்கள் அந்த லாரியின் கொக்கி, கம்பி போன்றவற்றை பிடித்தனர். இதை பார்த்த லாரி டிரைவர் உடனடியாக லாரியின் வேகத்தை குறைத்தார். அப்போது அரசு பஸ்சும், லாரியும் மிக அருகே சென்றதால், அவை ேமாதி படிக்கட்டுகளில் ஆபத்தான நிலையில் பயணம் செய்த 5 மாணவர்கள் தவறி விழுந்து, லாரியின் சக்கரத்தில் சிக்கும் அபாய நிலை ஏற்பட்டது. ஆனால் லாரி டிரைவர் சூழ்நிலையை உணர்ந்து லாரியை மெதுவாக இயக்கியதால் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் உயிர் தப்பினர்.
இது பற்றி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ஏற்கனவே இதேபோன்று பஸ்சின் படிக்கட்டில் பயணம் செய்த மாணவர்கள் சைக்கிளில் சென்ற ஒருவரை எட்டி உதைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் தொடர்ந்து இதுபோன்ற தவறான செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டு வருகிறார்கள். இதை தடுக்க உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.