திருவள்ளுவர் சிலையின் காலடியில் நிற்பது ஒரு சிறந்த அனுபவம் - பிரதமர் மோடி
|உலகளாவிய பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வுகளை இந்தியா முன்மொழிய, வள்ளுவரின் போதனைகள் முக்கிய பங்கு வகிப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
குமரி,
கன்னியாகுமரியில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான விவேகானந்தர் மண்டபத்தில் பிரதமர் மோடி 3 நாட்கள் தியானம் மேற்கொண்டார். நேற்று பிற்பகலில் தனது தியானத்தை நிறைவு செய்த பிரதமர், அதன் பின்னர் படகின் மூலமாக திருவள்ளுவர் சிலைக்கு சென்றார். திருவள்ளுவர் சிலையை சுற்றி வந்த பிரதமர் மோடி, திருவள்ளுவரின் பாதங்களில் மாலை வைத்து மரியாதை செலுத்தினார். அதன்பின்னர் ஹெலிகாப்டர் மூலமாக திருவனந்தபுரம் சென்ற அவர், அங்கிருந்து டெல்லி புறப்பட்டு சென்றார்.
இந்த நிலையில், திருவள்ளுவர் சிலை பார்வையாளர் குறிப்பேட்டில் பிரதமர் மோடி சில குறிப்புகளை பதிவிட்டுள்ளார். அதில் பிரதமர் மோடி குறிப்பிட்டு இருப்பதாவது;
"சமூகத்தின் கடமை, நெறிமுறைகளை பற்றிய ஆழமான கருத்துகளால் உலகெங்கிலும் உள்ள மக்களின் இதயங்களை வென்றது திருக்குறள். திருக்குறளை பல்வேறு மொழிகளில் வெளியிடும் பாக்கியம் தனக்கு கிடைத்ததில் மகிழ்ச்சி.
வளர்ந்த இந்தியாவை கட்டி எழுப்பும் எங்களது நோக்கத்திற்கு வள்ளுவரின் குறள்கள் உத்வேகத்தை தருகிறது. உலகளாவிய பிரச்சினைகளுக்கு சிறந்த தீர்வுகளை இந்தியா முன்மொழிய, வள்ளுவரின் போதனைகள் முக்கிய பங்கு வகிக்கிறது"
இவ்வாறு அதில் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.