< Back
மாநில செய்திகள்
மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்
மாநில செய்திகள்

மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டம்; முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைக்கிறார்

தினத்தந்தி
|
5 Sept 2022 2:32 AM IST

அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்விக்கு சென்ற மாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) தொடங்கி வைக்கிறார்.

புதுமைப்பெண் திட்டம்

2022-2023-ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் கடந்த மார்ச் மாதம் 18-ந்தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. அப்போது வெளியிடப்பட்ட அறிவிப்புகளில், 'அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை பயின்ற மாணவிகளுக்கு, அவர்கள் இளங்கலை படிப்பு படித்து முடிக்கும் வரை மாதம் ரூ.1,000 அவர்களது வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்' என்ற அறிவிப்பும் ஒன்று.

இந்த திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ.698 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது. முதற்கட்டமாக 1 லட்சம் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்கப்பட இருக்கிறது. 'புதுமைப்பெண் திட்டம்' என்று பெயர்சூட்டப்பட்டுள்ள இந்த திட்டத்தின் தொடக்க விழா சென்னை ராயபுரத்தில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் இன்று (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு நடைபெறுகிறது.

மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

விழாவுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்குகிறார். சிறப்பு விருந்தினராக டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கலந்து கொள்கிறார். அமைச்சர்கள் க.பொன்முடி, கீதா ஜீவன், சேகர்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.

விழாவில் உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து பேசுகிறார். டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால், 26 தகைசால் பள்ளிகளையும், 15 மாதிரி பள்ளிகளையும் தொடங்கி வைத்து பேசுகிறார்.

தலைமைச்செயலாளர் இறையன்பு, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஷம்பு கல்லோலிகர் மற்றும் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், அரசு அதிகாரிகள் இந்த விழாவில் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

மேலும் செய்திகள்