< Back
மாநில செய்திகள்
காவல் துறை, தீயணைப்பு துறைக்கு ரூ.24 கோடியில் கட்டிடங்கள் திறப்பு; தொழில் முனைவோருக்கு புதிய இணையதளம்
மாநில செய்திகள்

காவல் துறை, தீயணைப்பு துறைக்கு ரூ.24 கோடியில் கட்டிடங்கள் திறப்பு; தொழில் முனைவோருக்கு புதிய இணையதளம்

தினத்தந்தி
|
31 Dec 2022 5:34 AM IST

காவல் துறை, தீயணைப்பு துறைக்கு ரூ.24 கோடியில் கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார். தொழில் முனைவோருக்கு வழிகாட்டும் புதிய இணையதளத்தையும் அவர் தொடங்கிவைத்தார்.

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

கட்டிடங்கள்

முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் காவல் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் 23 கோடியே 72 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3 காவல் நிலையங்கள், 2 காவல் துறை கட்டிடங்கள் மற்றும் 2 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்கள் ஆகியவற்றை திறந்துவைத்தார்.

அந்த வகையில் சென்னை மாவட்டம் முத்தாப்புதுப்பேட்டை, நெல்லை மாவட்டம் மானூர் மற்றும் திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி ஆகிய இடங்களில் 3 கோடியே 47 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 3 காவல் நிலைய கட்டிடங்கள் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

மு.க.ஸ்டாலின் திறந்துவைத்தார்

சென்னை மாவட்டம் ஆவடியில் 10 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவலர் சமூதாயநலக்கூடம் மற்றும் தர்மபுரி மாவட்டம் தர்மபுரியில் 5 கோடியே 40 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள மாவட்ட காவல் அலுவலக இணைப்பு கட்டிடம், திருவாரூர் மாவட்டம் திருவாரூர் மற்றும் கோவை ஆகிய இடங்களில் 4 கோடியே 85 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 2 தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையங்கள் என மொத்தம், 23 கோடியே 72 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள காவல் துறை மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை கட்டிடங்களை முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, காவல்துறை தலைமை இயக்குனர் செ.சைலேந்திரபாபு, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை இயக்குனர் சீமா அகர்வால், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் விஸ்வநாதன், ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கையேடு

பசுமைத் தொழில்நுட்பம், ஊரக வாழ்வாதார மேம்பாடு சார்ந்து இயங்கும் மற்றும் பெண்களை முதன்மை பங்குதாரர்களாக கொண்டிருக்கும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கான சிறப்பு சலுகைத் தொகுப்பிற்கான அரசாணை வெளியிடப்பட்டது. அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள முக்கிய அம்சங்களை கொண்ட கையேட்டினை முதல்-அமைச்சர் வெளியிட்டார்.

இந்த அரசாணை மூலம் ஆண்டிற்கு, 20 பசுமை தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கு ஓராண்டுகால தொழில் விரைவாக்க பயிற்சி வழங்கப்படும். காலநிலை மாற்ற மேலாண்மை சார்ந்து இயங்கும் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை காட்சிப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடத்தப்படும்.

மானிய நிதி

ஊரக வாழ்வாதார மேம்பாடு சார்ந்து இயங்கும் நிறுவனங்கள் தங்களது புத்தாக்க தொழில் மாதிரிகளை பரிசோதித்து பார்க்க அரசின் வழியே உதவிகள் வழங்கப்படும். மேலும் "ஊரக தொழில் நிறுவனங்கள் சூழமைவு மேம்பாடு திட்டத்தின்" கீழ் இந்நிறுவனங்களுக்கான சந்தைகளை உருவாக்குதல் மற்றும் வழிகாட்டுதல்கள் வழங்குதல், தொழில் விரிவாக்க பயிற்சிகள் வழங்குதல், ஹேக்கத்தான் நிகழ்வுகளை ஒருங்கிணைத்தல் போன்ற பல செயல்பாடுகள் முன்னெடுக்கப்படும்.

தமிழ்நாடு புத்தொழில் ஆதார மானியநிதி (டான்சீட்) 4-வது பதிப்பிற்கான விண்ணப்பங்கள் ஜூலை முதல் ஆகஸ்டு வரை மொத்தம் 1,029 புத்தொழில் நிறுவனங்கள் விண்ணப்பித்திருந்தன. பல கட்டமாக நடைபெற்ற மதிப்பீட்டு பணிக்கு பின்பு முதல்கட்டமாக பசுமை தொழில்நுட்பம் சார்ந்து இயங்கும் 7 நிறுவனங்கள், ஊரக வாழ்வாதார மேம்பாடு சார்ந்து இயங்கும் 8 நிறுவனங்கள் மற்றும் பெண்களை நிறுவனர் அல்லது இணை நிறுவனர்களாக கொண்டிருக்கும் 10 நிறுவனங்கள் என மொத்தம் 25 நிறுவனங்களுக்கு முதல்-அமைச்சர் தலா ரூ.5 லட்சம் என மொத்தம் ரூ.1 கோடியே 25 லட்சம் மானிய நிதியினை வழங்கினார்.

வழிகாட்டி மென்பொருள்

புதுயுக தொழில்முனைவு பயணத்தில், தொழில்முனைவோர்களுக்கு துறைசார் அறிவும், அனுபவமும், கூர்நோக்கும் கொண்ட வல்லுனர்களின் வழிகாட்டுதல் அவசியம் ஆகும். தகுந்த வழிகாட்டுதலை எதிர்பார்க்கும் தொழில் முனைவோர்களையும், வழிகாட்ட தயாராக இருக்கும் அறிவுரைஞர்களையும் இணைக்கும் வழிகாட்டி மென்பொருள் இணையதளத்தை ("Mentor TN") முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

புத்தொழில் முனைவோர்கள் தங்களது நிறுவனம் சார்ந்த தகவல்களை பதிவேற்றியதும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் அவர்களது துறை சார்ந்த அறிவுரைஞர்கள் குறித்த தகவல்களை பெறும் வகையில் இத்தளம் அமைக்கப்பட்டுள்ளது. சென்னை தலைமை செயலகத்தில் நடந்த இந்த நிகழ்ச்சிகளில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், தலைமைச்செயலாளர் வெ.இறையன்பு, குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை செயலாளர் வி.அருண்ராய், தமிழ்நாடு புத்தொழில் புத்தாக்க இயக்கத்தின் முதன்மை செயல் அலுவலர் சிவராஜா ராமநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்