ராமநாதபுரம்
மேலச்செல்வனூர் பறவைகள் சரணாலயத்தில் தேங்கிய தண்ணீர்
|கோடை மழையால் மேலச்செல்வனூர் பறவைகள் சரணாலயத்தில் தண்ணீர் தேங்கியது. சீசன் முடிந்தும் பறவைகள் வர தொடங்கின.
சாயல்குடி,
கோடை மழையால் மேலச்செல்வனூர் பறவைகள் சரணாலயத்தில் தண்ணீர் தேங்கியது. சீசன் முடிந்தும் பறவைகள் வர தொடங்கின.
மேலச்செல்வனூர் சரணாலயம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் சாயல்குடி அருகே அமைந்துள்ளது மேலச்செல்வனூர் பறவைகள் சரணாலயம். அதுபோல் தமிழகத்தின் மிகப்பெரிய பறவைகள் சரணாலயங்களில் ஒன்றான பறவைகள் சரணாலயமும் இந்த மேலச்செல்வனூரில் அமைந்துள்ளது. சுமார் 5.63 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் சரணாலயம் அமைந்துள்ளது. இது கடந்த 1998-ல் சரணாலயமாக அரசால் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதுபோல் ஆண்டுதோறும் இந்த சரணாலயத்திற்கு வடகிழக்கு பருவமழை சீசன் தொடங்கியதும் அக்டோபர் மாதத்தில் இருந்து சாம்பல் நிறகூலைகடா, சங்கு வலை நாரை, நத்தை குத்தி நாரை, வெள்ளை நிற கூலைக்கடா, வெள்ளை அரிவால்மூக்கன், கருப்பு அரிவால்மூக்கன், கரண்டிவாயன் உள்ளிட்ட ஏராளமான பறவைகள் இனப்பெருக்கத்திற்காக வரும். இவ்வாறு வரும் பறவைகள் சரணாலயத்தின் நீர்நிலைகளில் உள்ள நாட்டு கருவேல மரங்களில் கூடுகட்டி முட்டையிட்டு குஞ்சு பொரித்து தங்கி இருக்கும். பின்னர் பருவமழை சீசன் முடிந்து கோடைகால சீசன் தொடங்குவதற்கு முன்பாக மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் அனைத்து பறவைகளும் குஞ்சுகளுடன் திரும்பி சென்று விடும்.
கோடை மழை
இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை சீசனில் அதிக அளவு மழை பெய்யவில்லை. இதனால் சாயல்குடி அருகே உள்ள மேலச்செல்வனூர் பறவைகள் சரணாலயத்திலும் தண்ணீர் இல்லாமல் சரணாலயத்தின் நீர் நிலைகள் வறண்டு போய் காட்சியளித்தன.
பருவமழை பெய்யாததாலும் சரணாலயத்தின் நீர் நிலையில் தண்ணீர் இல்லாததாலும் மேலச்செல்வனூர் பறவைகள் சரணாலயத்திற்கு சீசனுக்காக இந்த ஆண்டு பறவைகள் வராததால் சரணாலயம் வெறிச்சோடி காணப்பட்டது. இதனிடையே ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு பரவலாக கோடை மழை பெய்தது. இதே போல் சாயல்குடி, கடலாடி, சிக்கல் உள்ளிட்ட பல ஊர்களிலும் 5 நாட்களுக்கு மேலாக கோடை மழை நன்றாக பெய்தது. கோடை மழையால் மேலச்செல்வனூர் பறவைகள் சரணாலயம் தற்போது தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. வறண்டு போய் இருந்த பறவைகள் சரணாலயத்தில் தற்போது ஓரளவு தண்ணீர் இருப்பது அழகாக காட்சியளித்தது.
பறவைகள் வர தொடங்கின
இந்த சரணாலயத்தில் தண்ணீர் ஓரளவு இருந்து வருவதால் கருப்பு அரிவாள் மூக்கன், வெள்ளை அரிவாள் மூக்கன் உள்ளிட்ட பலவிதமான கொக்குகளும் தற்போது இங்கு குவிந்துள்ளன. சரணாலயத்தை சுற்றியுள்ள வயல்களில் பகல் முழுவதும் இரைதேட செல்லும் இந்த பறவைகள் மீண்டும் மாலை நேரங்களில் இந்த சரணாலயத்தின் நீர் நிலைகளில் உள்ள மரக் கிளைகளுக்கு தங்குவதற்காக வந்து விடுகின்றன. அதுபோல இந்த சரணாலயத்தின் நீர் நிலைகளில் ஓரளவு தற்போது தண்ணீர் வரத்து இருப்பதால் சுற்றியுள்ள இந்த கிராம மக்களுக்கும் மற்றும் கால்நடைகளுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகின்றது. இதனால் இந்த கிராம மக்களும் தற்போது மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.