தடுமாறும் தக்காளி விலை.. தவிக்கும் விவசாயிகள்.. அன்றும்.. இன்றும்..
|வரத்து அதிகரிப்பால் தக்காளி விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ளது ஒட்டன்சத்திரம் காந்தி காய்கறி மார்கெட். இங்கு உள்ளூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து காய்கறிகள் கொண்டுவரப்பட்டு சரியான முறையில் தரம் பிரித்து மாநிலத்தின் பிற பகுதிகள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு விற்பனைக்கு அனுப்பிவைக்கப்படும்.
இதில் கடந்த ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் தக்காளியின் வரத்து குறைவால் கடுமையான விலை உயர்வு ஏற்பட்டு மக்களை திக்குமுக்காட செய்தது. ஒரு கிலோ தக்காளியின் விலை ரூ.150 முதல் ரூ.200 வரை வரை விற்கப்பட்டது. அன்றாடம் உணவில் பயன்படுத்தப்படும் தக்காளியின் விலை அனைத்து தரப்பு மக்களையும் பாதித்தது. இதனால் மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள்.
இவ்வாறு தங்கம் விலையில் விற்ற தக்காளியின் வரத்து தற்போது அதிகரித்துள்ளது. இதனால் ஒட்டன்சத்திரம் மார்கெட்டிற்கு தக்காளி அதிகளவில் வந்து குவிந்துள்ளது. இதை போலவே தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் வரத்து அதிகரித்துள்ளது. தினமும் 75 டன் அளவிலான தக்காளிகள் ஒட்டன்சத்திரம் மார்கெட்டிற்கு வருகின்றன. இதனால் தக்காளியின் விலை கடுமையாக சரிந்து கிலோ ரூ .2 முதல் ரூ.5 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் விவசாயிகளுக்கு போதிய லாபம் கிடைக்காததால் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.