செங்கல்பட்டு
அறைக்குள் புகுந்து பெண்ணிடம் சில்மிஷம் செய்ததால் தர்மஅடி - சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஊழியர் தப்பி ஓட்டம்
|அறைக்குள் புகுந்து பெண்ணிடம் சில்மிஷம் செய்ததால் காதல் ஜோடி தர்மஅடி கொடுத்ததால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட ஊழியர் தப்பி ஓடிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், கல்பாக்கம் அருகே கூவத்தூர் அடுத்துள்ள பரமன்கேனி பகுதியில் உள்ள ஒரு பண்ணை வீ்ட்டில் சென்னையை சேர்ந்த ஒரு காதல் ஜோடி மற்றும் அவர்களது நண்பர்கள் உள்பட 8 பேர் 3 அறைகளில் தங்கினர்.
அப்போது காதல் ஜோடி மட்டும் தனியாக தங்கி இருந்த அறைக்குள் நள்ளிரவில் புகுந்த பண்ணை வீட்டில் வேலை பார்க்கும் ஊழியரான சீக்கினாங்குப்பம் பகுதியை சேர்ந்த சுபாஷ் (வயது 23), அயர்ந்து தூங்கி கொண்டிருந்த பெண்ணிடம், அவரது காதலன் போல் அருகில் படுத்து கொண்டு பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த பெண், திடுக்கிட்டு எழுந்தார். பின்னர் காதலனுடன் சேர்ந்து சுபாசை மடக்கி பிடித்து சரமாரியாக அடித்து உதைத்து கூவத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
சுபாஷ் மீது அத்துமீறி அறைக்குள் நுழைதல், கொலை மிரட்டல் விடுத்தல், பாலியல் பலாத்காரம் செய்தல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சுபாசின் செல்போனில் அங்குள்ள அறைகளில் தங்கும் பெண்கள் குளிப்பது, உடை மாற்றுவது, நீச்சல் உடையில் ஈர துணியுடன் நடந்து வருவது போன்ற வீடியோ காட்சிகள் இருப்பது தெரிந்தது.
இதற்கிடையில் காதல் ஜோடியினர் தாக்கியதால் காயம் அடைந்த சுபாஷ், போலீஸ் பாதுகாப்புடன் செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். ஆனால் அங்கு சிகிச்சை பெற்று வந்த சுபாஷ், ஆஸ்பத்திரியில் இருந்து தப்பிச்சென்று விட்டார். அப்போது அங்கு போலீசார் பாதுகாப்பில் இல்லை என்று கூறப்படுகிறது. தப்பி ஓடிய அவரை கூவத்தூர் போலீசார் தேடி வருகின்றனர்.