மயிலாடுதுறை
விற்பனைக்கு குவிந்த தர்பூசணி பழங்கள்
|பொறையாறு, செம்பனார்கோவில் பகுதியில் விற்பனைக்காக தர்பூசணி பழங்கள் குவித்து வைக்கப்பட்டு உள்ளன. ஒரு கிலோ தர்பூசணி ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது.
பொறையாறு:
பொறையாறு, செம்பனார்கோவில் பகுதியில் விற்பனைக்காக தர்பூசணி பழங்கள் குவித்து வைக்கப்பட்டு உள்ளன. ஒரு கிலோ தர்பூசணி ரூ.20-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தர்பூசணி பழங்கள்
கோடை காலத்துக்கு முன்பே செம்பனார்கோவில், வட்டார பகுதியில் தர்பூசணி பழம், சீசன் தொடங்கி உள்ளது. தற்போது பரசலூர், செம்பனார்கோவில், பொறையாறு, காழியப்பநல்லூர்
(தேசிய நெடுஞ்சாலை) பகுதியில் தர்பூசணி விற்பனைக்காக வியாபாரிகள் பழங்களை வாங்கி குவித்து உள்ளனர்.கோடை காலத்தில் தாகம் தணிக்கும் பழவகைகளில் முக்கியமானது தர்பூசணி. நீர்ச்சத்து நிறைந்த தர்பூசணி, கோடைகால பயிராகும்.
ஆண்டு தோறும் ஜனவரி மாதத்தில் தர்பூசணி சாகுபடி பருவம் தொடங்கும். கோடை வெயில் சுட்டெரிக்கும் ஏப்ரல் மாதம் தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு வரும். ஆனால் இந்த ஆண்டு கோடை காலத்துக்கு முன்பே தர்பூசணி பழ சீசன் தொடங்கி விட்டது.
பனிப்பொழிவு
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில், பரசலூர் பொறையாறு காழியப்பநல்லூர் உள்ளிட்ட இடங்களில் தற்போது பனிப்பொழிவு இருக்கும் நிலையில் வெளி மாவட்டங்களில் இருந்து தர்பூசணி பழங்கள் அதிகளவில் கொண்டு வரப்படுகின்றன.
பொறையாறு, செம்பனார்கோவில், உள்ளிட்ட இடங்கவில் தற்போது தர்பூசணி சாலையோரக் கடைகளில் குவித்து வைக்கப்பட்டு உள்ளன. சீசன் முன்கூட்டியே தொடங்கியதாலும் பனிப்பொழிவு சற்று குறைந்து இருந்தாலும் விற்பளையும் தற்போது மந்தமாகவே நடைபெற்று வருகிறது.
விலை அதிகரிக்க வாய்ப்பு
இதுகுறித்து தர்பூசணி வியாபாரிகள் கூறியதாவது:-
தர்பூசணி பழங்களை கும்மிடிப்பூண்டி, திருவண்ணாமலை, திண்டிவனம் பகுதிகளுக்கு சென்று மொத்தமாக கொள்முதல் செய்து வந்தோம். கோடை காலம் தொடங்குவதற்கு முன்பே தர்பூசணி விளைச்சல் அதிகமாக உள்ளதால் தற்போது தர்பூசணி அறுவடை தொடங்கி உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டத்தில் தற்போது வெயில் தாக்கம் அதிகரித்து உள்ளது. செம்பனார்கோவில் பகுதியில் தர்பூசணி விற்பனை கடந்த ஆண்டைவிட சற்று குறைவாகவே உள்ளது. கோடையில் வெயில் அதிகரித்தால் கொள்முதல் விலை அதிகரிக்கும். இதனால் பழ விலையும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.