கள்ளக்குறிச்சி
புனித மிக்கேல் அதிதூதர் ஆலய ஆடம்பர தேர்பவனி
|மைக்கேல்புரம் புனித மிக்கேல் அதிதூதர் ஆலய ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது.
மூங்கில்துறைப்பட்டு,
மூங்கில்துறைப்பட்டு அருகே மைக்கேல்புரத்தில் பிரசித்தி பெற்ற புனிதமிக்கேல் அதிதூதர் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் பெருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான விழா கடந்த 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் சிறப்பு பிரார்த்தனை மற்றும் கூட்டு திருப்பலி நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதையொட்டி ஆலயத்தில் சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதையடுத்து இரவு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் புனித ஆரோக்கிய மாதா, குழந்தை இயேசு, ஜெபஸ்தியார், சூசையப்பர் மரிய மதலேனால், வண்ணத்து சின்னப்பர் சொரூபங்கள் வைக்கப்பட்டது. அதன் பின்னர் ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதில் தேர்கள் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் சவேரியார்பாளையம், மைக்கேல்புரம், அருளம்பாடி, ஈருடையாம்பட்டு, மேல்சிறுவள்ளூர், கானாங்காடு, அந்தோணியார் புரம் உள்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஊர் காரியக்காரர்கள் மற்றும் ஊர் முக்கியஸ்தர்கள் செய்திருந்தனர்.