கள்ளக்குறிச்சி
மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் ஆலய ஆடம்பர தேர்பவனி - ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு
|மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் ஆலய ஆடம்பர தேர்பவனி நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
சின்னசேலம்,
புனித அந்தோணியார் ஆலயம்
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே மேல்நாரியப்பனூரில் நூற்றாண்டு பழமைவாய்ந்த கீழைநாட்டு பதுவா, போடி அற்புதர் என்று அழைக்கப்படும் புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஜூன் மாதம் ஆண்டு பெருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான பெருவிழா கடந்த 5-ந்தேதி சேலம் மறை மாவட்ட ஆயர் ராயப்பன் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து திருத்தல அதிபர் டி.ஆரோக்கியதாஸ், உதவி பங்கு தந்தை அலெக்ஸ் ஒளில்குமார், புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி முதல்வர் தேவதாஸ் ஆகியோர் முன்னிலையில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகளால் தினமும் காலை, மதியம், மாலை என நவநாள் சிறப்பு திருப்பலி நடைபெற்று வந்தது.
ஆடம்பர தேர்பவனி
இதையடுத்து திருச்சி மறை மாவட்ட ஆயர் ஆரோக்கியராஜ் தலைமையில் சிறப்பு குணமளிக்கும் வழிபாடு மற்றும் திருப்பலியுடன், பொருத்தனை தேர் பவனி நடந்தது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதையொட்டி புதுவை-கடலூர் உயர்மறை மாவட்ட பேராயர் கே.பிரான்சிஸ் தலைமையில் சிறப்பு கூட்டுப் பிரார்த்தனை, நற்கருணை ஆராதனை நடந்தது. பின்னா் வண்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட ஆடம்பர தேர்களில் புனித சூசையப்பர், புனித மரியாள், புனித அந்தோணியார் சொரூபங்கள் வைக்கப்பட்டது. தொடா்ந்து ஆடம்பர தேர்கள் முக்கிய வீதிகள் வழியாக பவனியாக சென்று மீ்ண்டும் ஆலயத்தை வந்தடைந்தது.
நேர்த்திக்கடன்
விழாவில் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு நேர்த்திக்கடன் செலுத்தியும், மெழுகுவர்த்தி ஏந்தியும் வழிபட்டனர்.
விழாவின் இறுதி நிகழ்வான நன்றி திருப்பலியும், கொடி இறக்கமும் நேற்று காலை நடைபெற்றது.