திருச்சி
புனித அன்னாள் ஆலய தேர் பவனி
|புனித அன்னாள் ஆலய தேர்பவனி நடந்தது.
கல்லக்குடி:
புள்ளம்பாடியில் உள்ள நூற்றாண்டு பழமைவாய்ந்த புனித அன்னாள் ஆலய திருவிழா, கடந்த 17-ந் தேதி பங்குத்தந்தை சூசைமாணிக்கம், உதவி பங்குத்தந்தை அருள்தொன்போஸ்கோ ஆகியோர் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து தினமும் அருட்தந்தையர்கள் தலைமையில் கூட்டுப்பாடல் திருப்பலி நடைபெற்று, நவநாள் சப்பரம் ஆலயத்தை சுற்றி வலம்வந்தது. கடந்த 24-ந் தேதி சிறப்பு கூட்டுப்பாடல் திருப்பலியும், வேண்டுதல் சப்பரபவனியும், நேற்று முன்தினம் வாணவேடிக்கை மற்றும் மேளதாளத்துடன் ஆடம்பர சப்பர தேர்பவனி நடைபெற்றது. நேற்று விழாவின் சிகர நிகழ்ச்சியாக புனித அன்னாள் சிலை தாங்கிய தேர்பவனி நடைபெற்றது. தேரினை மறைவட்ட முதன்மை குரு பீட்டர்ஆரோக்கியதாஸ் புனிதப்படுத்தி தொடங்கி வைத்தார். பேரூராட்சி தலைவர் ஆலிஸ் செல்வராணி ஜோசப் செல்வராஜ், செயல் அலுவலர் ஜவஹர் மற்றும் வார்டு கவுன்சிலர்கள், அருட்தந்தையர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து இரவில் ஆலயத்தை வந்தடைந்தது.