< Back
மாநில செய்திகள்
எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை ஆர்வத்துடன் எழுதிய மாணவ-மாணவிகள்
மதுரை
மாநில செய்திகள்

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை ஆர்வத்துடன் எழுதிய மாணவ-மாணவிகள்

தினத்தந்தி
|
7 April 2023 12:56 AM IST

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் எழுதினார்கள். தமிழ் மொழிப்பாடத்தேர்வு எளிமையாக இருந்ததாக அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் எழுதினார்கள். தமிழ் மொழிப்பாடத்தேர்வு எளிமையாக இருந்ததாக அவர்கள் கருத்து தெரிவித்தனர்.

பொதுத்தேர்வு

எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு நேற்று தொடங்கியது. இந்த தேர்வில் தமிழ் மொழிப்பாடத்துக்கு மதுரை, மேலூர் கல்வி மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் இருந்து 38,945 மாணவ, மாணவிகள் தேர்வெழுத விண்ணப்பித்திருந்தனர். இவர்களில் 925 மாணவர்கள் மட்டும் தேர்வெழுத வரவில்லை. தனித்தேர்வர்களில் மதுரை கல்வி மாவட்டத்தில் 329 பேரில் 23 பேர் மட்டும் தேர்வெழுத வரவில்லை.

மேலூர் கல்வி மாவட்டத்தில் விண்ணப்பித்த 191 பேரும் தேர்வெழுதினர். மதுரை மத்திய சிறையில் 23 பேரில் 2 பேர் மட்டும் தேர்வெழுதவில்லை. மதுரை மாவட்டத்தில் நேற்று எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வை மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் எழுதினார்கள்

மஹபூப்பாளையம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியை மகேசுவரி:- ஒரு மதிப்பெண் வினாக்களில் ஓரிரண்டு வினாக்களை தவிர மற்ற அனைத்தும் பயிற்சி பெற்ற வினாக்களே. குறு வினாக்கள், சிறு வினாக்கள், மொழிப் பயிற்சி, 5 மதிப்பெண் வினாக்கள் அனைத்துமே எளிமையாக இருந்தது. 8 மதிப்பெண் வினாக்களில் மிகவும் எதிர்பார்த்த துணைப்பாடம் வரவில்லை எனினும் விடை அளிக்க கூடிய வகையிலே இருந்தது. மொத்தத்தில் எளிமையான வினாத்தாள். அனைத்து மாணவர்களும் எளிதில் வெற்றி பெறலாம்.

தேர்வு எளிமை

எஸ்.எஸ்.எல்.சி. மாணவி மஹதி:- தமிழ் வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்தது. 15 ஒரு மதிப்பெண் வினாக்களில் 12 வினாக்கள் எளிமையாக இருந்தது. 2,3, 5 மதிப்பெண் வினாக்கள் அனைத்தும் அடிக்கடி தேர்வுகளில் கேட்கப்பட்டவை. 8 மதிப்பெண் வினாக்கள் படித்த பகுதிகள் என்றாலும், விரிவான விடைகளாக இருந்ததால் நேரம் போதவில்லை. சுமாராக படிக்கும் மாணவ, மாணவிகள் அதிக மதிப்பெண் பெறும் அளவுக்கு எளிமையாக வினாத்தாள் இருந்தது மகிழ்ச்சியாக உள்ளது.

நேரம் போதவில்லை

மெட்ரிகுலேசன் பள்ளி மாணவர்கள் ரஹ்மான், ராஜ்கமல்:- ஒரு மதிப்பெண் வினாக்கள் சற்று கடினமாக இருந்தது. கடிதம் எழுதும் பகுதி விடையளிக்க தாமதம் ஏற்பட்டது. புத்தகத்தின் பின்பக்க வினாக்கள் அதிகம் கேட்கப்பட்டிருந்தன. கட்டுரை பகுதியில் விரிவான விடை எழுத நேரம் இல்லை. இதனால் சுருக்கி எழுத வேண்டியிருந்தது. இதற்கு முழு மதிப்பெண் கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளது. சிறிய அளவில் விடையளிக்க ஏற்ப கேள்விகள் கேட்டிருந்தால் நல்ல மதிப்பெண் பெற முடியும். தற்போது 75 மதிப்பெண்கள் பெறுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Related Tags :
மேலும் செய்திகள்