சென்னை
எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் சிறப்பு மதிப்பெண் பெற்ற 707 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை - அமைச்சர் கே.என்.நேரு வழங்கினார்
|சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்று எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் சிறப்பு மதிப்பெண்கள் பெற்ற 707 மாணவ, மாணவிகளுக்கு அமைச்சர் கே.என்.நேரு ஊக்கத்தொகை வழங்கினார்.
சென்னை மாநகராட்சி வளாக கூட்டரங்கில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வில் சிறப்பு மதிப்பெண் பெற்ற 324 மாணவர்கள் மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் சிறப்பு மதிப்பெண் பெற்ற 383 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கினார்.
இதேபோல, மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்த 494 ஆசிரியர்களுக்கு ஊக்கத்தொகையும் வழங்கினார். தொடர்ந்து, பசுமைப் பரப்பளவை அதிகரிக்கும் வகையில் மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டது.
பின்னர், அமைச்சர் கே.என்.நேரு நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னை பள்ளிகளில் பயின்று 2023-ம் ஆண்டு அரசு பொதுத்தேர்வில் சிறப்பு மதிப்பெண் பெற்ற 707 மாணவர்கள் மற்றும் அவர்களுக்கு உறுதுணையாக இருந்த 494 ஆசிரியர்களுக்கு மொத்தமாக ரூ.30 லட்சத்து 64 ஆயிரத்து 500 ஊக்கத்தொகையும், பாராட்டு சான்றிதழ்களும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை பள்ளிகளில் பிளஸ்-2 பயின்று 2022-23-ம் கல்வியாண்டில் உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு முதலாம் ஆண்டு மருத்துவம் பயில ஒரு மாணவருக்கு ரூ.45 ஆயிரம், என்ஜினீயரிங் பயில 87 பேருக்கு ரூ.39 லட்சத்து 15 ஆயிரம், கலை மற்றும் அறிவியல் பயில 150 பேருக்கு ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் என வழங்கப்பட்டுள்ளது.
இதேபோல, வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னை மாநகராட்சியில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து சேவைத்துறை அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. 2 மாதங்களுக்கு சாலை வெட்டு பணிகளை மேற்கொள்ளக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிதாக சாலை வெட்டுப் பணிகள் மேற்கொள்ளாமல், ஏற்கனவே நடைபெறும் சாலை வெட்டு பணிகளை விரைந்து முடிக்க பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு மின்வாரியத்தின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள் முடியும் நிலையில் உள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 3 ஆயிரத்து 877 சாலைப் பணிகள் முடிவுற்றுள்ளன.
நாள்தோறும் சராசரியாக 70 சாலைகளை அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஏற்கனவே ஒப்பந்தம் போடப்பட்ட அனைத்து சாலைப் பணிகளும் இன்னும் ஒருவார காலத்திற்குள் முடிக்கப்பட்டுவிடும். மழைநீர் வடிகால் பணிகளை விரைந்து முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்வில், மேயர் பிரியா, துணை மேயர் மகேஷ் குமார், மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், மாமன்ற ஆளுங்கட்சித் தலைவர் ராமலிங்கம், நிலைக்குழு தலைவர் விசுவநாதன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.