ராமநாதபுரம்
இலங்கையில் இருந்து சிறுவன் உள்பட 4 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வருகை
|இலங்கையில் இருந்து சிறுவன் உள்பட 4 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர். கடல் நடுவே மணல் திட்டில் தவித்தவர்களை மீனவர்கள் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.
ராமேசுவரம்,
இலங்கையில் இருந்து சிறுவன் உள்பட 4 பேர் அகதிகளாக தனுஷ்கோடி வந்தனர். கடல் நடுவே மணல் திட்டில் தவித்தவர்களை மீனவர்கள் மீட்டு கரைக்கு அழைத்து வந்தனர்.
மணல் திட்டில் தவிப்பு
ராமேசுவரம் அருகே தனுஷ்கோடி கடல் நடுவே உள்ள மணல் திட்டில் அகதிகள் சிலர் தவிப்பதாக கடலோர போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதைத் தொடர்ந்து போலீசார், மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனிடையே தனுஷ்கோடி அருகே நடுக்கடலில் நாட்டுப்படகு ஒன்றில் மீன்பிடித்து வந்த மீனவர்கள், 4-வது மணல் திட்டில் சிறுவன், பெண் உள்ளிட்ட 4 அகதிகள் பரிதவித்ததை கண்டு, தங்கள் படகில் பாதுகாப்பாக ஏற்றி தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் கொண்டு வந்து, கடலோர போலீசாரிடம் ஒப்படைத்தனர்.
விசாரணை
பின்னர் சிறுவன் உள்பட 4 பேரும் வாகனம் மூலம் கடலோர காவல் நிலையம் அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் மத்திய-மாநில உளவு பிரிவு போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது, இலங்கை வவுனியா பொன் ஆவாரங்குளம் பகுதியை சேர்ந்த டோமினிக் பெர்னாண்டோ (வயது 42), இவருடைய மனைவி சுதர்சினி, மகன் அனோஜன் (6), உறவினர் மகேந்திரன் (50) ஆகிய 4 பேர் என தெரியவந்தது.
இலங்கையில் இருந்து அகதியாக வந்தது குறித்து ேபாலீசாரிடம் டோமினிக் கூறியதாவது:-
சுனாமி
கடந்த 2000-ம் ஆண்டில் இலங்கையில் முல்லைத்தீவை சேர்ந்த ரேகா என்பவரை காதலித்து திருமணம் செய்தேன். 2004-ம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி அலையில் சிக்கி என் மனைவி இறந்துவிட்டார். அதன் பின்னர் 2014-ம் ஆண்டு வவுனியாவை சேர்ந்த சுதர்சினியை திருமணம் செய்தேன். எங்களுக்கு 6 வயதில் மகன் உள்ளான்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக அங்கு பணம் இருந்தும் அத்தியாவசிய பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஒவ்வொரு நாளையும் நகர்த்துவது மிகவும் கடினமாக உள்ளது.
கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு வவுனியாவில் இருந்து மனைவி, குழந்தையுடன் புறப்பட்டு பேசாலை பகுதிக்கு வந்து என்னுடைய நண்பரின் வீட்டில் தங்கி இருந்தோம். தொடர்ந்து அவரின் உதவியுடன் இந்தியா வர திட்டமிட்டு இலங்கை பணம் ரூ.2 லட்சத்தை படகோட்டியிடம் கொடுத்து தலைமன்னார் பகுதியில் இருந்து படகில் ஏறி புறப்பட்டோம். எங்களுடன் உறவினர் மகேந்திரனும் வந்தார். நேற்று முன்தினம் இரவில் தனுஷ்கோடி அருகே இந்திய மணல் திட்டில் இறக்கிவிட்டு படகோட்டிகள் மீண்டும் இலங்கையை நோக்கி சென்றுவிட்டனர். தற்போது மீனவர்கள் உதவியுடன் மீட்கப்பட்டு, தனுஷ்கோடி வந்தோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
உளவுப்பிரிவு போலீசாரின் விசாரணைக்கு பின்னர் 4 அகதிகளும் மண்டபம் அகதிகள் முகாமில் ஒப்படைக்கப்பட்டனர்.